• May 25, 2025
  • NewsEditor
  • 0

சில நாட்களுக்கு முன்பு ஜீ தமிழின் ‘டான்ஸ் ஜோடி டான்ஸ்’ நிகழ்ச்சியில் ‘மாமன்’ படத்தின் புரொமோஷன் பணிகளுக்காக சூரி பங்கேற்றிருந்தார்.

அங்கு போட்டியாளர் பஞ்சமியின் நடனத்தையும் கதைகளையும் தெரிந்துகொண்ட சூரி, பஞ்சமியின் மூன்று மகன்களுக்கும் தாய்மாமனாக நின்று, “நான் காது குத்துகிறேன்” என நெகிழ்ச்சியுடன் கூறியிருந்தார்.

அந்த வாக்கைச் சொல்லி, சரியாக 14-வது நாளில் அதை நிறைவேற்றியும் காட்டியிருக்கிறார்.

Soori at Panchami’s Function

நேற்று ஶ்ரீபெரும்புதூரிலுள்ள ஒரு கோயிலில் வைத்து பஞ்சமியின் மகன்களுக்கு காது குத்து விழாவை நடத்தியிருக்கிறார் சூரி.

அதே விழாவில், ‘மாமன்’ படத்தின் இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜும் பங்கேற்று, பஞ்சமியின் மகன்களுடைய படிப்புச் செலவுகளை ஏற்றுக்கொள்வதாகக் கூறியிருக்கிறார்.

இப்படியான அடுத்தடுத்த மகிழ்ச்சியான விஷயங்களால் நிறைந்திருந்த பஞ்சமியின் குடும்பத்தை, அந்தக் காதுகுத்து விழாவிலேயே சந்தித்தோம்.

பஞ்சமி பேசுகையில், “ரொம்பவே எங்களுக்கு நிறைவாக இருக்கு. சூரி அண்ணன் மடியில் வைத்து எங்களுடைய குழந்தைகளுக்குக் காது குத்தியிருக்கோம். நல்லபடியாக நடந்து முடிஞ்சிருக்கு. அண்ணன்ங்கிற உறவில் சூரி அண்ணன் இன்னைக்கு இங்கு வந்திருக்கார்.

எனக்கு ஒரு தம்பி இருக்கான். எனக்கு அப்பா இல்லை. அதனால் அவன்தான் முன்னால் நின்று பண்ண வேண்டும். இந்த நிலைமையில் எங்களால் ஒரு விழாவை நடத்த முடியுமா என்று தெரியாமல் இருந்தோம். சூரி அண்ணன் வந்து நடத்தியிருக்கார்.

Panchami and his husband Manikandan
Panchami and his husband Manikandan

அதுவும், எனக்கு ஒரு தம்பி இருக்கிறான் என்று தெரிந்து, தாய்மாமனுக்கான இடத்தைக் கொடுக்க வேண்டும் என்று சூரி அண்ணன் செய்த விஷயம் நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை. என் தம்பியுமே அவர் மடியில் பசங்களை உட்கார வைக்கலாம்னு சொன்னான்.

சூரி அண்ணன் இப்படியொரு விஷயத்தைச் செய்தது ரொம்பவே சந்தோஷம். அதுமட்டுமில்லை, ‘மாமன்’ படத்தோட இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் சாரும் என்னுடைய குழந்தைகளோட படிப்புச் செலவுகளை ஏற்றுக்கிறேன் என்று சொல்லியிருக்கார். உறவுகளாக வந்து எல்லோரும் இத்தனை விஷயங்களைச் செய்யுறாங்க.

முதல் முறையாக சரத்குமார் சார் எனக்கு 1 லட்ச ரூபாய் கொடுத்தபோதுதான் என்னுடைய குழந்தைகளுக்கு நான் ஸ்கூல் ஃபீஸ் கட்டினேன். அதுவரைக்கும் ஸ்கூல் ஃபீஸ் எப்படிக் கட்டுறதுனு தினமும் நான் கடவுளிடம் அழுதிருக்கேன். அவர் கொடுத்த 1 லட்சம் எனக்கு ரொம்பவே பெருசு.

வரலட்சுமி மேடமும், ‘குழந்தைகளோட படிப்புச் செலவை நான் பார்த்துக்கிறேன். நீ நல்லா டான்ஸ் மட்டும் ஆடு. அதுல கவனம் செலுத்து’னு சொன்னாங்க. என் மூணு புள்ளைகளுக்கும் படிப்பு ரொம்பவே முக்கியம். ஏன்னா, எங்க குடும்பத்தில் முதல் பட்டதாரிங்கிற விஷயம் நடக்கவே இல்லை.

Panchami and his husband Manikandan
Panchami and his husband Manikandan

என் மூணு புள்ளைகளையும் ஒழுக்கத்தோடு நல்லா வளர்த்திடணும். கடவுளிடம் எத்தனையோ நாள், ‘எனக்கு ஏன் இவ்வளவு கஷ்டத்தைக் கொடுக்கிறே’னு கேட்டு அழுதிருக்கேன். இன்னைக்கு இவ்வளவு சந்தோஷங்களையும் நான் அனுபவிக்கிறேன்.

ஆனா, அந்த சந்தோஷத்தை முழுமையாகக் கொண்டாடவும் எனக்கு பயமாக இருக்கு. இத்தனைக்கும் காரணம் நான்தான் என்று என்னுடைய கணவர் சொல்லுவார். ஆனா, என் குடும்பம்தான் எல்லாத்துக்கும் காரணம். முக்கியமாக, என் கணவர்தான் அத்தனைக்கும் காரணம்.

மணிகண்டன் பேசுகையில், “ரொம்பவே சந்தோஷமான தருணம் இது. பஞ்சமிக்கு டான்ஸ் மேல் ஆர்வம் இருக்குனு தெரிஞ்சப்போ இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைக்கும்னு எதிர்பார்க்கல. இத்தனைக்கும் காரணம் பஞ்சமியோட திறமைதான். மணிகண்டனோட மனைவி பஞ்சமிங்கிற விஷயம் மாறி, இன்னைக்கு பஞ்சமியோட வீட்டுக்காரர் மணிகண்டன்னு சொல்லும்போது ரொம்ப சந்தோஷமாக இருக்கு.

பஞ்சமி முதன்முதலில் நடனமாட ஆர்வம் இருக்குனு சொல்லும்போது, அவங்க ஆசையை நிறைவேற்றுவதற்கான ஆசை எனக்கு இருந்தது. ஆனா, அப்போ அப்படியான சூழலில் நான் இல்லை. முதல்ல பஞ்சமி டான்ஸ் கிளாஸுக்கு போகும்போதுகூட, ஊரில் நிறைய பேர் நிறைய விஷயங்கள் சொன்னாங்க.

Panchami and his husband Manikandan
Panchami and his husband Manikandan

‘இப்படியான நேரத்தில் கல்யாணமான பிறகு மனைவியை டான்ஸ் கிளாஸுக்கு ஏன் அனுப்புற? குடும்பத்தை எப்படிக் கொண்டு போகணும்னு உனக்குத் தெரியலையா’னு கேட்டாங்க.

ஆனா, அது பஞ்சமியோட கனவு, அதை நடத்திக் காட்டணும்னு எனக்கு ஒரே எண்ணமாக இருந்தது. வீட்டில் யாராவது தடையாக எதாவது வார்த்தைகள் சொன்னால்கூட, அவங்களோடு நான் சண்டை போடுவேன்.

அன்னைக்கு அப்படிப் பேசினவங்களெல்லாம் இன்னைக்கு பாராட்டுறாங்க. அது மனிதனோட இயல்பான விஷயம்தான்!” என்றார் நெகிழ்ச்சியுடன்.

முழுப் பேட்டியைக் காண கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *