
சென்னை அணிக்கு நடப்பு ஐ.பி.எல் சீசன் கொடுங்கனவாக நிறைவடைய இருக்கிறது. சென்னை ஏலத்தில் எடுத்திருந்ததில் பெரும்பாலும் எந்த வீரரும் நம்பிக்கையளிக்கும் வகையில் செயல்படவில்லை. ஏல மேஜையிலேயே சென்னை அணி இந்த சீசனை இழந்துவிட்டதாகத்தான் தோன்றுகிறது.
அடுத்த சீசனுக்கு முன்பாக ஒரு மினி ஏலம் நடக்கும். அதற்கு சென்னை அணி தயாராக வேண்டும். இப்போதைய அணியில் இருக்கும் ஓட்டைகளை புதிய வீரர்களை ஏலத்தில் எடுத்து அடைக்கவேண்டும். எனில், இப்போதைய அணியிலிருந்து தேவைப்படாத வீரர்களை ரிலீஸ் செய்ய வேண்டும். இந்த சீசன் முடிந்த பிறகு பாரபட்சமே இல்லாமல் சென்னை அணி ரிலீஸ் செய்யவேண்டிய வீரர்களின் பட்டியல் இங்கே.
அஷ்வின் :
சந்தேகமே இல்லாமல் அஷ்வினை முதலில் அணியிலிருந்து ரிலீஸ் செய்ய வேண்டும். 9.75 கோடி ரூபாய்க்கு அஷ்வினை ஏலத்தில் எடுத்து வந்தார்கள். ஒயிட் பால் கிரிக்கெட்டில் அஷ்வினின் பார்ம் எப்போதோ தேயத் தொடங்கிவிட்டது. கடந்த சில ஆண்டுகளாகவே அவர் ஸ்ட்ரைக்கிங் பௌலராக இருந்திருக்கவில்லை.
கொஞ்சம் கட்டுக்கோப்பாக வீசி ரன்களைக் குறைவாக கொடுக்கும் தற்காப்பு பௌலராகத்தான் இருந்தார். ஆனால், இந்த சீசனில் அதுவுமே இல்லை. 9 போட்டிகளில் ஆடி 7 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்திருக்கிறார். எக்கானமி 9.12. சேப்பாக்கத்தில் அஷ்வின் அபாயகரமான பௌலராக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படியும் இல்லை.

சேப்பாக்கத்தில் 4 போட்டிகளில் 2 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்திருந்தார். எக்கானமி 8.95 ஆக இருந்தது. நூர் அஹமது ஸ்ட்ரைக்கிங் பௌலராக இருக்கிறார். அவருக்கு உறுதுணையாக அஷ்வின் இருந்து டைட்டாக வீசினாலே இன்னும் நிறைய விக்கெட்டுகள் கிடைக்கும்.
ஆனால், அஷ்வின் ஆப் ஸ்பின்னே வீசாமல் கேரம் பால்களாக வீசிக்கொண்டிருக்கிறார். அது எடுபடவும் இல்லை. பேட்டிங்கிலும் அவரை டாப் ஆர்டரில் இறக்கிப் பார்த்தார்கள். அதுவும் வேலைக்காகவில்லை. இன்னொரு சீசனுக்கு வாய்ப்புக் கொடுத்துப் பார்க்கலாம் எனும் நிலையிலெல்லாம் அஷ்வின் இல்லை. அவருக்கும் வயதாகிவிட்டது.

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார். அதனால் கையை கொடுத்து வாழ்த்தி வழியனுப்பி வைப்பதே சென்னை அணியின் எதிர்காலத்துக்கு உகந்ததாக இருக்கும். அவர் வெளியேற்றப்படுவதன் மூலம் சென்னை அணிக்கு 9.75 கோடி ரூபாய் மிச்சமாகும். அதை மினி ஏலத்தில் இளமையும் திறமையும் வாய்ந்த வீரர்களின் மீது முதலீடு செய்யலாம்.
ஜடேஜா:
சென்னை அணி எப்போதுமே எண்களையும் பார்மையும் விட எமோஷனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும். அந்தவிதத்தில்தான் ஜடேஜாவும் அந்த அணியில் இருக்கிறார். ஜடேஜாவை 18 கோடி ரூபாய் கொடுத்து சென்னை அணி ரீட்டெய்ன் செய்தது. அந்த 18 கோடி ரூபாய்க்கு ஏற்ற பெர்பார்மென்ஸை ஜடேஜா கொடுக்கவில்லை. ஜடேஜா மேட்ச் வின்னர்தான். ஆனால், Consistency ரொம்பவே முக்கியம்.

அது ஜடேஜாவிடம் கிடையாது. ஜடேஜா நல்ல அதிரடியான ஸ்ட்ரைக் ரேட்டில் பேட்டிங் ஆடி நாட்கள் ஆகிவிட்டன. இந்த சீசனில் நம்பர் 4 இல் இறக்கிவிட்டார்கள். அங்கே ஓரளவுக்கு ரன்கள் அடித்திருக்கிறார். இரண்டு அரைசதங்களை அடித்திருக்கிறார். ஆனால், அது டி20 க்கேற்ற அதிரடியான முறையில் இல்லை என்பதே பிரச்னை. அவராலும் போட்டியை முடித்துக் கொடுக்கும் வகையில் சரியான பினிஷை கொடுக்க முடியவில்லை.
பௌலிங்கிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை. 13 போட்டிகளில் 8 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியிருக்கிறார். எக்கானமி 8.81 ஆக இருக்கிறது. ஜடேஜாவை ஏலத்தில் விட்டு மீண்டும் கூட எடுக்கலாம். 18 கோடிக்கு குறைவான விலையில் கிடைக்க அதிக வாய்ப்பிருக்கிறது. அப்படி கிடைக்காவிடிலும் பெரிய நஷ்டமெல்லாம் இல்லை.

துபே :
துபேதான் இந்த சீசனில் சென்னை அணிக்காக அதிக ரன்களை அடித்திருக்கும் பேட்டர். 340 ரன்களை அடித்திருக்கிறார். ஆனால், ஸ்ட்ரைக் ரேட் 129 தான். சென்னை அணி எதிர்பார்த்த பெர்பார்மென்ஸ் அவரிடமிருந்து வரவில்லை. ஸ்பின்னர்களுக்கு எதிராகத்தான் அவரை பெரிய ஆயுதமாகப் பார்த்தார்கள்.
ஆனால், அவ்வளவு சிறப்பாகவெல்லாம் துபே செயல்படவில்லை. மேலும், இப்போது அந்த மிடில் ஓவர்களில் அதிரடியாக ஆடிக் கொடுக்கத்தான் டெவால்ட் ப்ரெவிஸை அழைத்து வந்திருக்கிறார்கள். அவர் நம்பர் 5 இல் சிறப்பாகவும் ஆடுகிறார். ஆக, சிவம் துபே ரிலீஸ் செய்துவிட்டு வேறு ஆப்சன்களை யோசிக்கலாம்.
பதிரனா :
பதிரனா 2023 சீசனில் ஏற்படுத்தியதைப் போல தாக்கத்த்தையும் ஏற்படுத்தவில்லை. காயமும் அடையாமல் இருப்பதில்லை. அவரை 13 கோடி ரூபாய் கொடுத்து ரீட்டெய்ன் செய்திருக்கிறார்கள். வருங்காலத்திற்கான ஆப்சனாக பார்த்தால் இன்னும் ஒரு சீசன் கூட முயன்று பார்க்கலாம். ஆனால், அணியில் பயிற்சியாளரான ஸ்டீபன் ப்ளெம்மிங்கே பதிரனா எங்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என அதிருப்தியாக பேசியிருக்கிறார்.

ஆக, பதிரனா ரீட்டெய்ன் செய்யப்படுவது சந்தேகம்தான். அவருக்குப் பதில் கொஞ்சம் அனுபவம் வாய்ந்த வெளிநாட்டு பௌலர்கள் யார் மீதாவது முதலீடு செய்யலாம்.

விஜய் சங்கர், தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி:
இந்த மூவருக்கும் சேர்த்து 7.30 கோடி ரூபாயை சென்னை அணி ஏலத்தில் செலவு செய்திருந்தது. மூவரும் இளம் வீரர்கள் இல்லை. எதிர்காலத்துக்கான ஆப்சனும் இல்லை. அப்படியிருக்க, இந்த சீசனில் அவர்கள் எதாவது கொஞ்சமாவது நம்பிக்கையளிக்கும் வகையில் ஆடியிருந்தால் கூட பரவாயில்லை. மூவரும் எதுவுமே செய்யவில்லை.

மூவரும் இணைந்தே 204 ரன்களைத்தான் எடுத்திருக்கின்றனர். மூவரையும் பாரபட்சமே பார்க்காமல் ரிலீஸ் செய்துவிட்டு, தமிழ்நாடு ப்ரீமியர் லீகிலிருந்து திறமையான வீரர்களை அணிக்குள் எடுத்து போடலாம்.
டெவான் கான்வே அல்லது ரச்சின் ரவீந்திரா:
ருத்துராஜ் கெய்க்வாட் நம்பர் 3 இல்தான் இறங்குவேன் என அடம்பிடிக்கிறார். ஆயுஸ் மாத்ரே ஓப்பனிங்கில் செட் ஆகிவிட்டார். ஆக, அவருடன் ஓப்பனிங் இறங்க ஒரு வீரர் வேண்டும். ஒரு வெளிநாட்டு வீரர் + ஒரு இந்திய வீரர் என்பதுதான் சிஎஸ்கேவின் ஓப்பனிங் கூட்டணியாக இருக்கும். அந்தவிதத்தில் பார்த்தால் கான்வே அல்லது ரச்சின் இருவரில் ஒருவரை அணியில் வைத்துவிட்டு இன்னொருவரை ரிலீஸ் செய்துவிடலாம். மினி ஏலத்தில் பேக் அப்பாக ஒரு வெளிநாட்டு ஓப்பனரை எடுத்து வரலாம்.

மேற்குறிப்பிட்ட வீரர்களையெல்லாம் வெளியேற்றினால் சென்னை அணி மினி ஏலத்துக்கு கிட்டத்தட்ட 60 கோடி ரூபாயோடு செல்லும். வெளிநாட்டு ஓப்பனிங் பேட்டர், வலுவான மிடில் ஆர்டர் பேட்டர், இந்திய ஸ்பின்னர்கள், வெளிநாட்டு வேகப்பந்து வீச்சாளர் போன்றவை சென்னை அணியின் தேவையாக இருக்கும். தேவைக்கேற்ப முதலீடு செய்து எடுக்கும் வகையில் கையில் கோடிகளும் இருக்கும். சென்னை அணி என்ன செய்கிறதென்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
சென்னை அணி வெளியேற்ற வேண்டிய வீரர்களாக நீங்கள் நினைப்பவர்களை கமென்ட் செய்யுங்கள்.