‘தக் லைஃப்’ திரைப்படம் ஜூன் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் ரிலீஸையொட்டி இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளிலும் ப்ரோமோஷனுக்காக படக்குழுவினர் சுற்றி வருகின்றனர். சென்னை சாய் ராம் கல்லூரியில் பிரமாண்டமாக தக் லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடைபெற்று முடிந்திருக்கிறது. படக்குழுவினர் அனைவரும் இந்த நிகழ்வில் பங்கேற்றிருக்கிறார்கள்.

விழாவில் பேசிய கமல், “ரசிகர்களாகிய உங்களின் பிரதிநிதியாக, கன்னட சூப்பர் ஸ்டார் இங்கு வந்துள்ளார். ஆனால், அவர் இங்கு தன்னை சூப்பர் ஸ்டாராக அடையாளப்படுத்தவில்லை. ஒரு மகனாக, ஒரு ரசிகனாக, உங்களின் பிரதிநிதியாக வந்துள்ளார். இந்த அன்புக்கு நான் எப்படி அடிபணியாமல் இருக்க முடியும்? தம்பி STR, நீங்கள் பயணிக்கப் போகும் தூரம் எனக்குத் தெரியும். உங்களுக்கும் புரியும். உங்களுக்கு ஒரு கடமை இருக்கிறது. இந்தக் கூட்டத்தை வழிநடத்தும் தலைவன் நீங்கள். அந்தப் பொறுப்புடன் நீங்கள் நடந்து கொள்ள வேண்டும். இப்போதும் அப்படித்தான் இருக்கிறீர்கள். ஆனால், அந்தப் பொறுப்பு இன்னும் வளர்ந்திருக்கிறது. அது சுமையல்ல, சுகம். அதை அனுபவியுங்கள். அதைப் பார்த்து நானும் அனுபவிப்பேன்!
முதல்வராக வேண்டும் என்று நான் அரசியலுக்கு வரவில்லை
‘விஸ்வரூபம்’ பிரச்னையின்போது எல்டாம்ஸ் ரோட்டில் நின்றவர்களில் நானும் ஒருவன் என்று அசோக் செல்வன் கூறியது போல, என்னுடன் இருந்த பல ரசிகர்களை எனக்குத் தனிப்பட்ட முறையில் தெரியாது. அவர்களுக்கு எல்லாம் நான் எப்படி நன்றி சொல்வது? அதற்காகவே நான் அரசியலுக்கு வந்தேன். முதல்வராக வேண்டும் என்று நான் அரசியலுக்கு வரவில்லை. ஆனால், கடந்த 40 ஆண்டுகளாக ஒரு எம்.எல்.ஏ. ஒரு தொகுதிக்காக என்ன செய்ய வேண்டுமோ, அதை நாங்கள் மெதுவாகச் செய்து கொண்டிருக்கிறோம்.

ஏனெனில், நாங்கள் தனி மனிதர்கள். என்னுடன் இளம் வயதில் உழைத்த தம்பிகள் இன்று சமூகத்தில் பெரிய மனிதர்களாக உயர்ந்திருக்கிறார்கள். அதேபோல, உங்களுடைய தம்பிகளும் இருக்க வேண்டும், STR!
நான் பொறாமைப்படும் நடிகர்களில் நீங்களும் ஒருவர்
‘இரட்ட’ என்ற படத்தைப் பார்த்தேன். நான் கிட்டத்தட்ட 30-க்கும் மேற்பட்ட இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறேன். இரண்டு வேடங்களுக்கு வித்தியாசம் காட்ட, மேக்அப்பில் பல மாற்றங்களைச் செய்வேன். ஆனால், ஜோஜு தன்னுடைய ஆரம்பகாலப் படத்திலேயே, அதுவும் ஒரே காவல் நிலையத்தில் நடக்கும் கதையில், இரண்டு வேடங்களுக்கு இடையே அற்புதமாக வித்தியாசம் காட்டியிருந்தார். ஜோஜு, நான் பொறாமைப்படும் நடிகர்களில் நீங்களும் ஒருவர். நடிக்க வேண்டும் என்று நினைப்பவர்களைக்கூட போட்டியாளர்களாகக் கருதுபவன் நான். ஆனால், அதே நேரத்தில், அவர்களை வரவேற்பதையும் என் கடமையாகக் கருதுகிறேன்.
“‘பாட்டொலிக்கும் குயில்கள் இல்லை… என் பாதையில்…! படமெடுக்கும் பாம்புகள் நெளிந்திருக்கின்றன.’ ஆகாரத்துக்காக அழுக்கைச் சாப்பிட்டு தடாகத்தைச் சுத்தம் செய்யுதே மீன், அதைப் போல நான்!” இது கலைஞர் சொன்னது. நான் பேசுற எல்லாமே காப்பி அடிச்சதுதான். அபிராமியைப் பார்த்து, ‘பிட்டு அடிக்குறீங்களா?’ன்னு மணிரத்னம் கேட்டார். நானே பிட்டு தான். அதுவும் பள்ளிக்கூடத்துக்கே போகாத பையன், ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டுக்குப் போகாத பையன், பிட்டு அடிக்காம வேற என்ன பண்ணுவான்? இப்படி பிட்டு அடிச்சி அடிச்சி, டாக்டர் பட்டமே கொடுத்துட்டாங்க. ஆனா, அதை என் அக்காகிட்ட காட்டவே இல்ல. காட்டியிருந்தா, என் தலையிலேயே கொட்டி, ‘உனக்கு இது வேற கொறவா, இன்னும் படிச்சிருக்கலாம்னு’ திட்டியிருப்பா.

கடைநிலை சினிமா ரசிகனாக…
“என்னை வியப்பில் ஆழ்த்திக்கொண்டிருக்கும் தமிழ் சினிமாவுக்கு, என்னை குழந்தைப் பருவத்திலிருந்து தூக்கிக் கொஞ்சிக்கொண்டிருக்கும் தமிழ் சினிமாவுக்கு நன்றி. அதை எப்படி சொல்வதென்றால், அடுத்து ஒரு நல்ல படம் எடுத்து தமிழ் சினிமாவை உயர்த்துவதில் ஒரு கடைநிலை சினிமா ரசிகனாக இருப்பதையே நான் விரும்புகிறேன்.” எனப் பேசினார்.