
சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்றவர் அபய் எஸ் ஓகா. கடந்த சில நாள்களுக்கு முன்பு பணியில் இருந்து ஓய்வு பெற்றார். 22 ஆண்டுகள் நீதிபதியாக பணியாற்றிய அபய் ஓகா பல முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்புகளை வழங்கி இருக்கிறார். தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீனில் வெளி வந்ததும் அமைச்சராகப் பதவியேற்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டபோது அமைச்சர் பதவி வேண்டுமா சிறை வேண்டுமா என்று நீதிபதி அபய் ஓகா கேள்வி எழுப்பினார். அதனைத் தொடர்ந்து செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதே போன்று ஜாமீன் கிடைத்தும் பிணை தொகை கட்டமுடியாமல் தொடர்ந்து சிறை தண்டனை அனுபவித்து வரும் கைதிகள் ஜாமீனில் வெளி வர தேவையான உத்தரவை நீதிபதி அபய் ஓகா பிறப்பித்தார். அதோடு அமலாக்கப் பிரிவு மற்றும் சி.பி.ஐ போன்ற விசாரணை ஏஜென்சிகளிடம் பொதுமக்களுக்காக நீதிபதி அபய் ஓகா பல முறை கேள்வி கேட்டு போராடி இருக்கிறார்.
காங்கிரஸ் எம்.பி இம்ரான் சமூக வலைதலைத்தில் தெரிவித்த கருத்துக்காக குஜராத் அரசு தொடர்ந்த வழக்கை நீதிபதி அபய் ஓகா ரத்து செய்து உத்தரவிட்டார். இது போன்று நீதிபதி அபய் ஓகா வழங்கிய தீர்ப்புகளை எண்ணிக்கொண்டே செல்ல முடியும். அப்படிப்பட்ட நீதிபதி பணியில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முதல் நாள் அவரது தாயார் இறந்துவிட்டார். அவரது தாயார் மும்பை தானேயில் இறந்து போனார். உடனே அபய் ஓகா மும்பைக்கு விரைந்து சென்றார். மும்பையில் தனது தாயாருக்கு இறுதிச்சடங்குகளை செய்து விட்டு அன்று இரவே டெல்லிக்கு வந்தார்.
அவர் பணியில் இருந்து ஓய்வு பெறும் நாளில் பணிக்கு வந்திருந்தார். கடைசி நாளில் அபய் ஓகா 11 முக்கியமான வழக்குகளில் தீர்ப்பு கூறினார். அவர் பணியில் இருந்து ஓய்வு பெற்றது குறித்து மூத்த அரசு வழக்கறிஞர் கே.வெங்கடரமணி கூறுகையில், ”நீதிபதி அபய் ஓகா வழக்கறிஞர்களை விட கூடுதலாக தன்னை தயார்படுத்திக்கொண்டு கோர்ட்டிற்கு வரக்கூடியவர்” என்று தெரிவித்தார்.