
ஜூனில் இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. அங்கே 5 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடவுள்ளது. விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற அணியின் சீனியர்கள் ஓய்வுபெற்ற பிறகு இந்திய அணி ஆடப்போகும் முதல் தொடர் இது. இந்நிலையில், இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியை அறிவித்துவிட்டு தேர்வுக்குழுத் தலைவர் அகர்கர் பத்திரிகையாளர்களை சந்தித்திருந்தார்.
அகர்கர் பேசியதாவது, ‘இந்திய அணியின் புதிய டெஸ்ட் கேப்டனாக கில்லை அறிவிக்கிறோம். கில் இளம் வீரர். டி20 யிலும் கேப்டனாக நன்றாக செயல்பட்டிருக்கிறார். இது அதிக அழுத்தமிக்க பணிதான். ஆனாலும், எங்களின் தேர்வு சரியானதுதான் என கில் நிரூபிப்பார் என நம்புகிறோம். அணியின் பேட்டிங் ஆர்டர் குறித்தெல்லாம் கில்லும் கம்பீரும் இணைந்து முடிவெடுப்பார்கள்.
ஐ.பி.எல் ரெக்கார்டுகளை வைத்து சாய் சுதர்சனை அணியில் எடுக்கவில்லை. கடந்த ஒன்றிரண்டு ஆண்டுகளாகவே சாய் சுதர்சனை கவனித்து வருகிறோம். அணியில் இடமில்லாததால்தான் அவரை எடுக்காமல் இருந்தோம். இப்போது அவருக்கான இடம் கிடைத்திருக்கிறது.

ரெட்பால் கிரிக்கெட்டிலும் அவர் நன்றாகத்தான் ஆடியிருக்கிறார். விராட் கோலி, ரோஹித் சர்மா, அஷ்வின் போன்ற சீனியர் வீரர்கள் ஓய்வு பெறும்போது அவர்களின் வெற்றிடத்தை நிரப்புவது கடினமான விஷயம்தான். மூன்று பேருமே இந்திய கிரிக்கெட்டின் உச்ச நட்சத்திரங்கள். கோலி, ரோஹித் சர்மா இருவரிடமுமே நான் பேசினேன். கடந்த ஏப்ரல் தொடக்கத்திலேயே கோலி அவரின் முடிவை கூறிவிட்டார்.
கோலி மாதிரியான வீரர் அப்படியொரு முடிவை சொல்லும்போது நாம் அதை மதிக்க வேண்டும். இருவரும் இந்திய அணியின் வட்டத்தில் பெரிய மரியாதையை சம்பாதித்து வைத்திருக்கின்றனர். கண்டிப்பாக அவர்களை மிஸ் செய்வோம்.
இங்கிலாந்துக்கு எதிராக பும்ரா ஐந்து போட்டிகளில் ஆடுவாரா என்பதே சந்தேகம். அவர் எத்தனைப் போட்டிகளில் ஆடுவார் என்பதிலேயே தெளிவு இல்லை.

அவர் அணியில் இருப்பதில் எங்களுக்கு மகிழ்ச்சி. ஒரு வீரராக அவர் எங்களுக்கு ரொம்பவே முக்கியம். கேப்டன்சி என்பது கூடுதல் அழுத்தம். பும்ராவின் பணிச்சுமையை நிர்வகிக்கும் பொருட்டே அவரை கேப்டனுக்கான வாய்ப்பாக பார்க்கவில்லை.’ என்றார்
இந்திய அணி :
கில் (கேப்டன்), ரிஷப் பண்ட் (துணை கேப்டன்), யாஷஸ்வி ஜெய்ஸ்வால், சாய் சுதர்சன், அபிமன்யூ ஈஸ்வரன், கருண் நாயர், நிதிஷ் ரெட்டி, துருவ் ஜூரேல், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் ஷர்துல் தாகூர், பும்ரா, சிராஜ், அர்ஷ்தீப் சிங், பிரஷித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், குல்தீப் யாதவ்.