
புதுடெல்லி: மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தேசிய பாதுகாப்புக்கு ஆபத்தை விளைவிக்கும் கேள்விகளைக் கேட்பதை நிறுத்த வேண்டும் என்று பாஜக செய்தித் தொடர்பாளர் கௌரவ் பாட்டியா தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக செய்தித் தொடர்பாளர் கௌரவ் பாட்டியா, "நமது பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையை உலகம் முழுவதும் ஒப்புக்கொள்கிறது. பாகிஸ்தானுக்கு பாடம் கற்பித்த விதத்திற்காக அனைத்து நாடுகளும் நமது துணிச்சலான ஆயுதப் படைகளைப் பாராட்டுகின்றன. ஜனநாயகத்தில் பிரதமருடன் கருத்து வேறுபாடு கொள்ள ராகுல் காந்திக்கு உரிமை உண்டு என்றாலும், பிரதமருக்கு எதிராக அவதூறான மொழியைப் பயன்படுத்துவது மிகவும் கவலைக்குரியது. ராகுல் காந்தி இந்தியாவின் தலைவராக நிற்கிறாரா அல்லது பாகிஸ்தானின் ஊதுகுழலாக நிற்கிறாரா என்பதை அவர் இப்போது தீர்மானிக்க வேண்டும்.