
கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி, திட்டுவிளை அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வம்(65). இவர் நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலையில் பெண்களுக்கான தையலகம் நடத்தி வருகிறார். இவர் நேற்று முன் தினம் இரவு தனது டெய்லரிங் கடைக்குள் கத்தரிக்கோலால் சரமாரியாக குத்திக் கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இது குறித்து வடசேரி போலீசார் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து கொலையாளியை தேடி வந்தனர். போலீஸார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து நாகர்கோவிலில் தனியார் விடுதியில் பதுங்கி இருந்த சந்திரமணி (38) என்பவரை கைதுசெய்தனர். அவர் டெய்லரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். கைதான சந்திரமணி தூத்துக்குடி மாவட்டம் சேதுங்க நல்லூர், கோவில் பத்து பகுதியை சேர்ந்தவர் ஆவர். அவர் நாகர்கோவிலில் தங்கியிருந்து ஒரு தனியார் ஓட்டலில் வேலைசெய்துவந்தார்.
கொலைக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தியதில் சந்திரமணி தனது பேண்ட் ஒன்றை அளவு சரிசெய்து வழங்குமாறு டெய்லர் செல்வத்திடம் கொடுத்த்துள்ளார். அதை டெய்லர் செல்வம் சரிசெய்ததும் நேற்று முன் தினம் மாலை 4 மணியளவில் சந்திரமணி அதை வாங்கிச்சென்றார். பின்னர் சுமார் 6.45 மணியளவில் மீண்டும் டெய்லர் கடைக்கு வந்த சந்திரமணி, பேண்ட் அளவு சரியாக இல்லை எனக் கூறியுள்ளார். இதனால் டெய்லர் செல்வத்துக்கும், ஓட்டல் ஊழியர் சந்திரமணிக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பாக மாறி உள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த சந்திரமணி கடையில் துணி வெட்டுவதற்காக மேசையில் வைத்திருந்த கத்தரிகோலை எடுத்து கடையின் உரிமையாளரான செல்வத்தை காது அருகில் மற்றும் முதுகு பகுதியில் சரமாரியாக குத்தினார். ரத்த வெள்ளத்தில் டெய்லர் செல்வம் சரிந்தார். சந்திரமணி அங்கிருந்து தப்பி ஓடினார். இதில் டெய்லர் செல்வம் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இது குறித்து போலீஸார் கூறுகையில், “டெய்லர் கொலை வழக்கில் சி.சி.டி.வி கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தினோம். அதில் சந்திரமணி பதற்றத்துடன் டெய்லர் கடையில் இருந்து வெளியேறும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. அடுத்தடுத்து பொருத்தப்பட்டிருந்த கேமராக்களில் சந்திரமணி தனியார் விடுதிக்கு செல்லும் காட்சிகள் சி.சி.டி.வி-யில் பதிவாகியிருந்தன. அதன் அடிப்படையில் விடுதியில் பதுங்கியிருந்த சந்திரமணியை கைதுசெய்தோம்” என்றனர்.