
சென்னை: “பஞ்சாயத்துப் பகுதிகளுக்கு வீட்டு வரி, தண்ணீர் வரிகளை அரசு உயர்த்தி இருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்த வரிகளை திரும்பப் பெற வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்.” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆட்சிக்கு வந்த 48 மாதங்களில், பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் உள்ள வீடுகள், கடைகளுக்கு இரண்டு முறைகளுக்கு மேல் சொத்து வரியை உயர்த்தியதுடன், இனி ஆண்டுதோறும் 6 சதவீத வரி உயர்வையும் அறிவித்த ஸ்டாலின் மாடல் அரசு, இந்த ஆண்டு (2025-2026) முதல் தமிழகத்தில் அனைத்து பஞ்சாயத்துகளிலும் உள்ள ஓலைக் குடிசைகள், ஓடு / ஆஸ்பெட்டாஸ் வீடுகள், கான்கிரீட் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்திற்கும் சொத்து வரியை உயர்த்தியதுடன், புதிய வரியை வசூலிக்க அதிகாரிகளை வற்புறுத்தி வருகிறது.