
வேலூர் திமுக-வில், கதிர் ஆனந்த் எம்பி, வேலூர் மத்திய மாவட்டச் செயலாளரும் அணைக்கட்டு தொகுதி எம்எல்ஏ-வுமான ஏ.பி.நந்தகுமார், வேலூர் மாநகரச் செயலாளரும் எம்எல்ஏ-வுமான கார்த்திகேயன் என ஆளுக்கொரு பக்கமாக முக்கோண அரசியல் நடத்துபவர்கள். இவர்கள் மூவரும் தங்களது ஆதரவாளர்களை சந்தோசப்படுத்த தங்கள் செலவில் அவர்களை இன்பச்சுற்றுலா இட்டுச் செல்வது தான் இப்போது வேலூர் திமுக-வில் குளுகுளு பேச்சாக இருக்கிறது.
இந்த ஆண்டு மட்டுமல்ல… கடந்த சில ஆண்டுகளாகவே இந்த மூவரும் மாவட்ட திமுக-வினரை கோடை தவறாமல் குளுகுளு சுற்றுலா அழைத்துச் செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். கழகத்தினருக்கு இந்த பேக்கேஜ் சிஸ்டத்தை முதன்முதலில் அறிமுகம் செய்து வைத்தவர் மத்திய மாவட்டச் செயலாளர் நந்தகுமார் தான். அவரைப் பார்த்து மற்றவர்களும் தங்களது விசுவாசிகளை குஷிப்படுத்த இதை அமல்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள்.