• May 24, 2025
  • NewsEditor
  • 0

Doctor Vikatan: தினமும் இரவில் முகத்துக்கு க்ரீம் தடவ வேண்டுமா… அந்த க்ரீமை எப்படித் தேர்ந்தெடுக்க வேண்டும்…. நைட் க்ரீம், ஆன்டிஏஜிங் க்ரீம், சீரம் இந்த மூன்றும் ஒன்றா… எதை, எப்படிப் பயன்படுத்த வேண்டும்?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா

சருமநல மருத்துவர் பூர்ணிமா

தினமும் காலையில் எழுந்ததும் முகம் கழுவுவது, குளிப்பது, பிறகு மேக்கப் செய்துகொள்வது என சில விஷயங்களை ரொட்டீனாக செய்கிறோம். அதைப் போலவே நைட் ரொட்டீனும் மிக முக்கியம்.  உங்கள் வயது, சருமத்தின் தன்மை போன்றவற்றைப் பொறுத்து நைட் க்ரீம், சீரம் போன்றவற்றைத் தேர்வு செய்யலாம்.

இரவில் தூங்கச் செல்வதற்கு முன், அன்றைய தினம் சருமத்துக்கு உபயோகித்த சன் ஸ்கிரீன், மேக்கப் உள்ளிட்ட அனைத்தையும் அகற்ற வேண்டியது மிகமிக முக்கியம். முதலில் முகத்தை கிளென்ஸ் செய்ய  வேண்டும். மேக்கப் போடும்பட்சத்தில் டபுள் கிளென்ஸ்கூட செய்ய வேண்டியிருக்கும்.  அதன் பிறகு ஃபேஸ் வாஷ் உபயோகிக்க வேண்டும். இப்படி முகத்தை சுத்தப்படுத்திய பிறகு, சருமத்துக்கு மீண்டும் அதற்கான மாய்ஸ்ச்சரைசரை கொடுக்க வேண்டும். இதுபோன்றதொரு நைட் ரொட்டீன் அனைவருக்கும் அவசியம்.

நைட் க்ரீமில் பல வகைகள் உள்ளன. எது, யாருக்கு என்பது வயதைப் பொறுத்து தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.  20 முதல் 25 வயது வரை வெறும் மாய்ஸ்ச்சரைசர் மட்டும் போட்டாலே போதுமானதாக இருக்கும்.

பருக்கள், மங்கு போன்ற ஏதேனும் பிரச்னைகள் இருந்தால் அந்தந்தப் பிரச்னைக்கேற்ற நைட் க்ரீமை தேர்ந்தெடுத்து உபயோகிக்கலாம். சாலிசிலிக் ஆசிட், கிளைகாலிக் ஆசிட் என இவற்றை ஆக்டிவ்ஸ் என்று சொல்வோம். எந்தப் பிரச்னைக்கான ஆக்டிவ் என்பது தெரிந்து அது உள்ள நைட் க்ரீமை பயன்படுத்தும்போது அதன் பலன் சிறப்பாக இருக்கும்.

25 வயதுக்கு மேலானவர்கள், ஆன்டிஏஜிங் தன்மையுள்ள நைட் க்ரீம் உபயோகிப்பது சிறந்தது.

25 வயதுக்கு மேலானவர்கள், ஆன்டிஏஜிங் தன்மையுள்ள நைட் க்ரீம் உபயோகிப்பது சிறந்தது. சருமம் தன்னைத்தானே பழுதுபார்த்துக்கொள்ளும் தன்மையோடு இருக்கும். ஆனாலும், வயதாக, ஆக அந்தத் தன்மை குறைய ஆரம்பிக்கும்.

வெளிப்புறத்திலிருந்து அதைக் கொடுக்கும்விதமாக ஆன்டிஏஜிங் தன்மையுள்ள நைட் க்ரீம் உபயோகிக்கலாம்.  ஆன்டிஏஜிங் தன்மை உள்ளது என்றால், அதில் ரெட்டினாலுக்கு முதலிடம் உண்டு.

Skincare Tips

வயதுக்கேற்ப அதன் சதவிகிதம் மாறும். அதைப் பயன்படுத்தவென குறிப்பிட்ட வழிகளும் உள்ளன. சரும மருத்துவரை அணுகினால், உங்களுக்கான சரியான நைட் க்ரீமையும் அதைப் பயன்படுத்தும் முறையையும் சொல்வார்.

சீரம் என்பது நிறைய நல்ல தன்மைகளைக் கொண்ட சிறிய அளவிலான திரவ வடிவில் இருக்கும். இதை மிகக் குறைவாக உபயோகித்தாலே போதுமானதாக இருக்கும்.

சுத்தமான சருமத்தில் முதலில் சீரம் பயன்படுத்த வேண்டும்.  அது சருமத்தில் ஊடுருவிய பிறகு ஹைட்ரேட்டிங் தன்மையுள்ள மாய்ஸ்ச்சரைசிங் க்ரீம் உபயோகிக்கலாம்.

ரெட்டினால் இருந்தாலே அது ஆன்டிஏஜிங் க்ரீம்தான். அத்துடன் பெப்டைட்ஸ், வைட்டமின் சி போன்றவை சேரும்போது இன்னும் முழுமையானதாக அமையும். காலையிலிருந்து இரவு வரை சருமம் சந்தித்த பாதிப்புகளைச் சரிசெய்ய நைட் கேர் ரொட்டீன் மிக மிக முக்கியம். 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *