
தஞ்சாவூரில் அதிமுக ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூரில் அதிமுக சார்பில், தமிழகத்தில் நடைபெறும் பாலியல் சம்பவங்களை கண்டித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் ஆர்.பி உதயகுமார் பேசியதாவது, “தமிழகத்தில் இன்றைக்கு பாழாய் போன ஸ்டாலின் திமுக ஆட்சிக்கு பாலியல் சம்பவமே சாட்சி. பாலியல் வன்கொடுமை, நான்கு ஆண்டுகளில் நம் நெஞ்சை உலுக்குகிற சொல்லாக உள்ளது.
தமிழகம் முழுவதும் இன்றைக்கு பாலியல் வன்முறை சம்பவ செய்தியை திராணியற்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது இந்த ஸ்டாலின் அரசு.
பொதுவாக ஆட்சி அதிகாரம் எதற்கு? நல்லதை ஊக்கப்படுத்தவும், கெட்டதை தடுத்து நிறுத்தவும் தான். காவல்துறை என்று ஒன்று தமிழ்நாட்டிலே இருக்கிறதா? குற்றம் நடந்தது என்று சொன்னால் எங்களுக்கு கோவம் வரும் என்கிறார் முதல்வர்.
காவல்துறை எதற்காக என்கிற அடிப்படை இலக்கணம் கூட தெரியாத 23-ம் புலிகேசியாக முதல்வரை தமிழ்நாடு பெற்றுள்ளது.
மறைந்த முதல்வர் ஜெயலிலதா, காட்டுக்குள்ள போய் வீரப்பனை சுட்டுப் பிடித்தார். ஆனால், ஸ்டாலின் நாட்டுக்குள்ள இருக்கிற கொலைகாரனை பிடிக்க முடியவில்லை.
`எதுக்கும் பதில் இல்லை..’
குற்றவாளிகள் காவல்துறையை கண்டு பயப்பட வேண்டாமா. எதிர்கட்சி தலைவர் பழனிசாமி யார் அந்த சார்? யார் அந்த தம்பி? யார் அந்த வி.ஐ.பி.,? யார் எந்த தியாகி? யார் அந்த குற்றவாளி? என சட்டசபையில் கேட்டார். எதுக்கும் பதில் இல்லை.
நிதி ஆயோக் கூட்டத்தில் மூன்று ஆண்டுகளாக முதல்வர் ஸ்டாலின் ஏன் கலந்து கொள்ளவில்லை என பழனிசாமி கேட்டார். இந்த தமிழ்நாடு புறக்கணிக்கப்படுகிறது. ஆகவே தன்மானம் உள்ள நான் அங்கே செல்ல மாட்டேன் என்றார் ஸ்டாலின். இப்போது உங்கள் தன்மானம் எங்கே போச்சு.

டெல்லி பயணம்
தற்போது யாரை காப்பாற்ற, உங்கள் ஆட்சியை காப்பாற்றவா எதற்காக டெல்லி போகிறீர்கள். ஸ்டாலின் குடும்பத்தை சேர்ந்த 26 வயது தம்பி, இரண்டு ஆண்டுகளில், ஆயிரம் கோடி சினிமா துறையிலே முதலீடு செய்திருக்கிறார்.
தேர்தல் வாக்குறுதி
நமது இளைஞர்கள் வறுமை கண்ணீரை துடைக்க போராடுகிறார்கள். 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என சொன்ன தேர்தல் வாக்குறுதி என்னாச்சு.
அமைச்சர்கள் ராஜினாமா
சட்டசபை நடந்து கொண்டிருக்கும் போது, இரண்டு அமைச்சர்கள் ராஜினாமா செய்த வரலாறு இதுவரை தமிழக அரசியலில் ஸ்டாலின் அரசை தவிர வேறு யாருக்கும் கிடையாது.
செந்தில் பாலாஜி மட்டுமே ஜெயிலுக்கு போக மாட்டார். எல்லோரையும் கூண்டோட ஜெயிலுக்கு கூட்டிட்டு போவார். நாங்க தானே அனுப்பி வச்சிருக்கோம். ஸ்டாலினுக்கு தெரியாது.
அரசு கஜானாவிலே சேர வேண்டிய மொத்த பணத்தையும், கருணாநிதி, ஸ்டாலின் குடும்ப கஜானாவிலே சேர்த்தவர் செந்தில்பாலாஜி. அவரை தியாகி என முதல்வர் ஸ்டாலின் கூறியதால், துரைமுருகனுக்கு வந்த நெஞ்சு வலி இன்னும் போகவே இல்ல.
மின்சார கட்டணம்
மின்சார கட்டணத்தை எட்டு ஆண்டுகள் உயர்த்தாமல் இந்த சுமையை மக்கள் மீது ஏற்றக்கூடாது என மத்திய அரசு பல அழுத்தங்கள் கொடுத்தாலும், அதை நாமே ஏற்றுக்கொள்ள வேண்டும் என அறிவித்த முதலமைச்சர் தான் பழனிசாமி. அந்த மின்சார கட்டணத்திற்கு போராட்டம் நடத்தியவர் ஸ்டாலின். இன்னும் சில நாள்களில் மின்சார கட்டண உயர்வு குறித்து அறிவிப்பு வரும். எடப்பாடி பழனிசாமி நிர்வாக தன்மையை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர்.

`போலீசாருக்கே பாதுகாப்பு இல்லை’
2021-ம் ஆண்டு நடந்த தேர்தலில் விபத்திலே வந்த அரசு. அவர் வரும் 2026, 2031, 2036 நான் தான் முதல்வர் என கூறி வருகிறார். ஒரு மனிதனுக்கு ஆசை இருக்கலாம் பேராசை இருக்க கூடாது.
எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராக வருவதை யாராலும் தடுக்க முடியாது. பழனிசாமி மக்களுக்கான முதல்வர், ஸ்டாலின் வீட்டு மக்களுக்கான முதல்வர். அவரது கையில் உள்ள போலீசாருக்கே பாதுகாப்பு இல்லை.
இது குறித்து சட்டசபையில் பேசினால் எங்களை குண்டு கட்டாக துாக்கி வெளியே எறிகின்றனர். மீண்டும் எடப்பாடி பழனிசாமி ஆட்சி வரும். இதே ஸ்டாலின் சட்சபையில் இருந்து சட்டை மட்டும் அல்ல, வேட்டியை கிழித்துக்கொண்டு ஒடுவார்.
`பழனிசாமி டெல்லி சென்று நிறைவேற்றிய கோரிக்கை’
தி.மு.கவில் 38 எம்.பிக்கள் உள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலின், 100 நாள் வேலை திட்டத்திற்கு சம்பளத்தை பெற முடியவில்லை. இந்நிலையில்,
பழனிசாமி டெல்லி சென்று, 100 நாள் வேலை திட்டம், கல்வி, மெட்ரோ ரயில் திட்டம், நிவாரணம் ஆகியவைக்கு நிதி கேட்டதுடன் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவும் கோரிக்கை வைத்தார். ஒரு வாரத்தில், 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட சம்பளம், மெட்ரோ ரயில் திட்ட நிதியை வழங்கியது. ஜாதிவாரிய கணக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டது.

“பாலியல் வன்கொடுமை: இதுவரை இப்படி ஒரு அவல நிலை ஏற்பட்டது இல்லை”
திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை 23 சதவீதம் அதிகரித்துள்ளதாக புள்ளி விபரம் கூறுகிறது. இதுவரை 18,200 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதுவரை இப்படி ஒரு அவல நிலை ஏற்பட்டது இல்லை.
குற்றவாளிகள் பரம்பரை குற்றவாளிகள் என்றால், அவர்களை இரும்புக்கரம் கொண்டு போலீஸ் அடக்கும். ஆனால், தி.மு.க கரைவேட்டி கட்டிக்கொண்டால் என்ன வேணாலும் தமிழகத்தில் செய்யலாம். எனவே, நடைபெறும் மன்னராட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். வீட்டு மக்களுக்காக உழைக்கிற முதல்வரை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.” என்றார்.