
தே.மு.தி.க மீது மாறி, மாறி கூட்டணி பேரம் பேசும் கட்சி என்கிற விமர்சனம் இருக்கிறது. இதை உடைக்க வேண்டும் என்பதற்காகவே கடந்த தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் உறுதியாக இருந்தார், பிரேமலதா. தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த்தின் மறைவுக்கு பிறகு, விருதுநகரில் நிச்சயம் வெற்றி கிடைக்கும் எனப் பெரிதும் நம்பியவருக்கு இறுதியில் ஏமாற்றமே மிஞ்சியது. இதையடுத்து அ.தி.மு.க உதவியுடன் சகோதரர் சுதீஷை ராஜ்யசபா எம்.பியாக்கிவிடலாம் என திட்டம் இருந்தது. கூடவே 2026 சட்டப்பேரவை தேர்தலையும் அ.தி.மு.க-வுடன் இணைந்து சந்திக்கவே கணக்கும் போட்டிருந்தார். ஆனால் இதையெல்லாம், ‘தே.மு.தி.க-வுக்கு ராஜ்யசபா சீட் கொடுப்பதாக எந்த ஒப்பந்தமும் போடவில்லை’ எனக்கூறி தவிடுபொடியாக்கினார், எடப்பாடி.
இதையடுத்துதான் தி.மு.க ஆதரவு ரூட்டில் பயணிக்கத் தொடங்கினார், பிரேமலதா. அந்த சமயத்தில்தான் தமிழக அரசின் பட்ஜெட் வெளியானது. அதற்கு, ‘தமிழக அரசின் பட்ஜெட்டை வரவேற்கிறோம். ஏனெனில் கடந்த 2006-ல் விஜயகாந்த்தின் முதல் தேர்தல் அறிக்கையில் கொடுத்த பல்வேறு திட்டங்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது’ என்றார். இதையடுத்துதான் தி.மு.க பக்கம் செல்ல பிரேமலதா தயாராகிவருகிறார் என்கிற பேச்சு எழுந்தது. இப்படியான பரபர சூழலில்தான் பிரேமலதாவை நேரடியாக மொபைலில் தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார், முதல்வர் ஸ்டாலின். இதேபோல் தி.மு.க நடத்திய தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான அனைத்துக்கட்சி கூட்டத்திலும் தே.மு.தி.க பங்கெடுத்து. இதனால் வரும் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க இடம்பெறும் என்ற பேச்சு எழுந்தது.
இதற்கிடையில் தான் பிரதமர் மோடியைப் புகழ்ந்து வீடியோ ஒன்றை வெளியிட்டார், பிரேமலதா. அதில், ‘பிரதமர் நரேந்திர மோடிக்கும் விஜயகாந்த்துக்கும் இடையிலிருந்த உறவு, அரசியலைத் தாண்டிய ஒன்று. ‘தமிழகத்தின் சிங்கம்’ என்று அன்பாக அழைப்பார்’ எனப் புகழ்ந்து பேசியிருந்தார். பதிலுக்கு மோடியும், ‘எனது இனிய நண்பர் கேப்டன் விஜயகாந்த் அற்புதமானவர். சமூக நன்மைக்காக அவர் செய்த பணிகளுக்காகப் பல தலைமுறைகளைச் சேர்ந்த மக்கள் அவரை நினைவு கூர்கிறார்கள்’ எனத் தெரிவிக்க பா.ஜ.க பக்கம் ஸ்டியரிங்கை திருப்பினார், பிரேமலதா.
இந்தசூழலில்தான் கடந்த 22-ம் தேதி நாமக்கல்லில் தே.மு.தி.க-வின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் மைக் பிடித்த பிரேமலதா, “2026 சட்டப்பேரவை தேர்தலில் தே.மு.தி.க-வின் நிலைப்பாடு குறித்து ஏற்கனவே தெளிவுப்படுத்தி விட்டோம். கட்சியின் வளர்ச்சிக்கு மட்டுமே நாங்கள் முக்கியத்துவம் கொடுத்து செயல்பட்டு வருகிறோம். விரைவில் கடலூர் மாவட்டத்தில் தே.மு.தி.க மாநாடு நடத்தப்பட உள்ளது. அந்த மாநாட்டில் யாருடன் கூட்டணி?, எத்தனை தொகுதி?, கட்சியின் வேட்பாளர்கள் யார்? என்பது குறித்து அறிவிக்க உள்ளோம். அதற்கு முன்பாக 234 தொகுதிகளிலும் தொகுதி பொறுப்பாளர்களை அறிவித்து, அதற்கான பணிகளை தொடங்க உள்ளோம். அதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் நான் மற்றும் விஜய பிரபாகர் சுற்றுப்பயணம் செய்து நேரடியாக தே.மு.தி.க தொண்டர்களையும் மக்களையும் சந்திக்க உள்ளோம்” எனத் தெரிவித்திருக்கிறார்.
இதன் பின்னணி குறித்து நம்மிடம் பேசிய தே.மு.தி.க சீனியர்கள், “கடந்த தேர்தலில் அ.தி.மு.க-வுடன் கூட்டணி ஒப்பந்தம் ஏற்பட்ட போது எங்களுக்கு ராஜ்யசபா சீட் தருவதாக தெரிவித்தார்கள். ஆனால் கடைசியாக இல்லை என எடப்பாடி சொல்லிவிட்டார். தற்போது அந்த சீட்டை பா.ம.க-வுக்கு கொடுக்க ஆலோசித்து வருகிறார்கள். ஆனால் எங்களிடம் அ.தி.மு.க ராஜ்யசபா சீட் தருவதாக தெரிவித்ததற்கான ஆதாரம் இருக்கிறது. நேரம் வரும்போது அனைத்தையும் சொல்வேன் என சமீபத்தில் தே.மு.தி.க-வின் பொருளாளர் சுதீஷ் பேட்டி கொடுத்திருந்தார். தொடர்ச்சியாக எம்.பி சீட் கேட்டு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். ஆனால் அ.தி.மு.க பிடி கொடுப்பதாக தெரியவில்லை. எனவேதான் அண்ணியார் இப்படி சொல்லியிருக்கிறார். ஒருவேளை எங்களுக்கு எம்.பி சீட் கொடுக்கவில்லையென்றால் வேறு கூட்டணிக்கு செல்வது குறித்து முடிவு செய்யப்படும். அதற்கான சமிக்ஞைதான் இது” என்றனர்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன், “தே.மு.தி.க-வுக்கு எப்படியும் ராஜ்யசபா சீட் கிடைக்கும் என பிரேமலதா நம்பினார். அது கிடைக்காத வருத்தத்தில்தான் தி.மு.க பக்கம் நகர ஆரம்பித்தார். இதையடுத்து பிரேமலதாவைத் தொடர்பு கொண்டு பேசிய அமைச்சர் எ.வ.வேலு, ‘வரவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் தி.மு.க கூட்டணிக்கு ஆதரவு கொடுங்கள். நல்ல எண்ணிக்கையில் உங்களுக்கு சீட் தருகிறோம். தேர்தல் விஷயங்களை நாங்களே பார்த்துக்கொள்கிறோம்’ எனத் தெரிவித்திருக்கிறார். இதற்கு தே.மு.தி.க-வும் கிட்டத்தட்ட ‘ஓகே’ சொல்லும் நிலையில்தான் இருக்கிறது. அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணி அமைந்துள்ளதால் தங்கள் பக்கம் கூடுதல் பலம் இருக்க வேண்டும் என தி.மு.க விரும்புகிறது.
எனவேதான் இந்த முயற்சியை எடுத்திருக்கிறார்கள். அதேபோல் பிரேமலதாவும் தே.மு.தி.க-வை விட கம்யூனிஸ்டுகளின் வாக்குவங்கி குறைவாக இருக்கிறது. இருப்பினும் தலா 4 எம்.பி, எம்.எல்.ஏ சீட்டுக்களை வைத்திருக்கிறார்கள். இதற்கு அவர்கள் தி.மு.க கூட்டணியில் இருப்பதுதான் காரணம். எனவேதான் தி.மு.க கூட்டணியில் இடம்பிடிக்க பிரேமலதா ஆர்வமாக இருக்கிறார். ஆனால் தி.மு.க 5 சீட்டுக்கள் வரை மட்டுமே கொடுக்கத் தயாராக இருக்கிறது. அதேபோல் ராஜ்யசபா சீட் தொடர்பாக ஜனவரியில்தான் சொல்வோம் என தெரிவித்து விட்டார்கள். எனவே டிமாண்டை அதிகரிக்க வேண்டும் என்பதற்காகவே தற்போது விரைவில் கூட்டணி குறித்து அறிவிப்போம் என சொல்லியிருக்கிறார். தே.மு.தி.க-வை பொறுத்தவரைக் கூட்டணி இறுதி செய்யும் வரையில் எந்த முடிவுக்கு வர முடியாது. எனவே பொறுத்திருந்து பார்க்கலாம்” என்றார்.