• May 24, 2025
  • NewsEditor
  • 0

ன்றைய பரப்பரப்பான‌ உலகிலும் தலைமுடி என்றாலே இளசுகளுக்கு கொஞ்சம் அக்கறை அதிகம்தான். அக்கறை அதிகம் காட்டுவதாலோ என்னவோ முடிகொட்டுதல், இளநரை அப்படி இப்படின்னு ஆயிரம் பிரச்னை அந்த ஒற்றை தலைக்கு மேல் தாளம்போட்டுக்கொண்டே இருக்கிறது.

முடி உதிர்வதைத் கூட நம்ப இளசுங்க சகிச்சிட்டுப் போயிடுறாங்க. ஆனா, அந்த நூற்றுக்கணக்கான முடியில‌ ஒரு முடி வெள்ளையா இருந்துட்டா போதும். பேரிடி தலையில விழுந்த மாதிரி புஸ்சுனு போயிடுவாங்க. உடனே அந்த வெள்ளை முடியை புடுங்கி வீசுறது, தலைக்கு சாயம் பூசுறது, விளம்பரத்துல காட்டுற ஷாம்பு எல்லாம் வாங்கி தலைக்குப் போடுறதுனு கண்ணாடி முன்னாடியே நிக்க ஆரம்பிச்சிடுவாங்க.

டீ, காபி குடிக்குறதுனாலதான் இளநரை வருதுன்னு நம்பி அதை குடிக்குறதைக்கூட நிறுத்திடுவாங்கன்னா பார்த்துக்கோங்க.

இளநரை

சரி, டீ, காபி குடிச்சா இளநரை வரும்னு சொல்றது வெறும் வாய்வார்த்தையா அல்லது உண்மையா? மருத்துவ காரணங்கள் ஏதும் இருக்கிறதா என்று சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து நிபுணர் நித்திய ஶ்ரீ அவர்களிடம் கேட்டோம்.

”டீ, காபி எடுத்துக்கொள்வதற்கும் முடி நரைப்பதற்கும் நேரடித்தொடர்பு இல்லை. ஆனால், மறைமுக‌‌மானத் தொடர்பு உள்ளது.

டீ. காபியில் காஃபைன் அதிகளவு இருக்கும். இதனை நாம் அதிகளவு எடுத்துக் கொள்ளும்போது, அது தலைமுடியின்‌ ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கும் இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் B போன்ற ஊட்டச்சத்துக்களை உடல் உறிஞ்சுவதில் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால், இளநரை ஏற்படும்.

ஊட்டச்சத்து நிபுணர் நித்திய ஶ்ரீ
ஊட்டச்சத்து நிபுணர் நித்திய ஶ்ரீ

ஆக்ஸ்சிடேட்டிவ் ஸ்டிரெஸ் (oxidative stress) காரணமாகவும் இளநரை ஏற்படும். ஆக்ஸிடேட்டிவ் ஸ்டிரெஸ் என்பது உடலில் கழிவுகள் (free radicals) அதிகளவில் உருவானதால், அவற்றை தடுக்க உடலின் ஆன்டிஆக்ஸிடென்ட் (antioxidant) திறன் போதிய அளவில் இல்லாத நிலையைக் குறிக்கும்.

இது செல்கள் மற்றும் திசுக்களுக்கு சேதத்தை ஏற்படுத்தம். மனிதர்கள் சரியாக புரதம், மாவுச்சத்து, நார்ச்சத்து போன்ற ஊட்டச்சத்து நிறைந்த உணவு முறைகளை கடைப்பிடித்தல் அவசியம்.

ஆனால், அதிகப்படியான டீ, காபி எடுத்துக்கொள்ளும்போது ஒருவேளை உணவைத் தவிர்ப்போம். அல்லது குறைந்த அளவு உணவு மட்டுமே எடுப்போம். இதனால், அவர்கள் உடலில் ஆக்சிஜன் அழுத்தம் உண்டாகி செல் பாதிப்பு நிகழும். இது, தலைமுடிக்கு நிறத்தை வழங்கக்கூடிய மெலனின் செல்களையும் பாதிக்கும். இதனாலும் இளநரை ஏற்படும்.

மிக முக்கியமான ஒன்று மரபியல் காரணம். தாத்தாவிற்கோ, பாட்டிக்கோ அல்லது பெற்றோருக்கோ இளநரை பிரச்னை இருந்திருந்தால் அவர்களுடைய சந்ததியினருக்கும் இளநரை ஏற்படும். இதை பல ஆய்வு முடிவுகளும் உறுதிப்படுத்தியுள்ளன. தவிர, புகைப்பழக்கம், போதைப்பொருட்களை அதிகளவு எடுத்துக் கொள்பவர்களுக்கும் இளநரை பிரச்னை ஏற்படும்.

மரபணு
மரபணு

இளநரைப் பிரச்னைக்கு தீர்வு நம்மிடம்தான் உள்ளது. டீ, காபி அதிகம் எடுத்துக்கொள்பவராக இருந்தால் அதை நாளொன்று ஒன்று அல்லது இரண்டு கப் என குறைத்துக்கொள்ள வேண்டும். கூடவே தினமும் உடற்பயிற்சி செய்வது, வயதுக்கு ஏற்ற நிம்மதியான தூக்கம், ஊட்டச்சத்து நிறைந்த சரிவிகித உணவு உட்கொள்வது, போதுமான அளவு தண்ணீர் எடுத்துக்கொள்வது போன்றவை மிக அவசியம். கூடவே மன அழுத்தம் இருந்தால் அதையும் குறைத்துக்கொள்ள வேண்டும். இவற்றை கடைப்பிடிப்பதன் மூலம் இளநரை ஏற்படுவதை தவிர்க்க முடியும்” என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் நித்திய ஶ்ரீ.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *