• May 23, 2025
  • NewsEditor
  • 0

திருப்பூர் முருகம்பாளையம் கிராமத்தில் சூர்யா கிருஷ்ணா நகர் 1-ஆவது வீதியில் ஹிமாலயா பார்மசி என்ற மருந்துக் கடை இயங்கி வருகிறது. ஜோலி அகஸ்டின் என்பவர் இந்த மருந்துக் கடையை நடத்தி வருகிறார். கேரளத்தைச் சேர்ந்த ஜோலி அகஸ்டின், தன்னை மருத்துவர் எனக் கூறிக் கொண்டு நோயாளிகளுக்கு ஊசி செலுத்தியும், குளுக்கோஸ் செலுத்தியும் சிகிச்சை அளித்து வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகளுக்குப் புகார் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, திருப்பூர் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் தலைமையிலான அதிகாரிகள் குழு ஜோலி அகஸ்டின் மருந்துக் கடையில் ஆய்வு மேற்கொண்டனர். அப்பொழுது அங்கு ஜோலி அகஸ்டின் மருந்துக் கடையின் பின்புறம் உள்ள இடத்தில் இரண்டு கட்டில் வசதிகளுடன் நோயாளிகளுக்கு ஊசி மருந்துகள் மற்றும் குளுக்கோஸ் செலுத்துவதும் தெரியவந்தது.

ஜோலி அகஸ்டீன்

அவரிடம் விசாரித்தபோது, நோயாளிகளுக்கு வைத்தியம் அளிப்பதற்கான எந்தவித கல்வித் தகுதியும் இல்லாததும் தெரியவந்தது. இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், “கேரளத்தில் பிளஸ் 2 வரைக்கும் படித்துள்ள ஜோலி அகஸ்டின் திருப்பூரில் கடந்த 18 ஆண்டுகளாக தன்னை மருத்துவர் எனக் கூறிக் கொண்டு, நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளார். இவர் கடந்த 2017, 2024- ஆம் ஆண்டும் இதே காரணத்திற்காக இருமுறை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர். மருந்துக் கடையில் வைத்தியம் பார்க்க வைத்திருந்த மருந்துப் பொருள்கள் மற்றும் ஊசி மருந்துகள், சர்க்கரை அளவு பார்க்கும் கருவி, ரத்த அழுத்தம் பார்க்கும் கருவிகள் கைப்பற்றப்பட்டு உடனடியாக சீல் வைக்கப்பட்டதுடன், ஜோலி அகஸ்டின் கைது செய்யப்பட்டார்” என்றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *