
கேரள மாநிலம் கொல்லம் பாருப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் ஜெயின் மகன் ஜிதின். ஜிதினின் தாத்தாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்ததைத் தொடர்ந்து சிகிச்சைக்காக கொல்லத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
ஜிதினின் தாத்தா அங்கு உள் நோயாளியாக தங்கியிருந்து சிகிச்சைபெற்றார். அப்போது அந்த மருத்துவமனையைச் சார்ந்த நர்சிங் கல்லூரியில் படிக்கும் மாணவியுடன் ஜிதினுக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் காதலாக மாறியது. மாணவி கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்.
இந்த நிலையில், நர்சிங் மாணவிக்கு திருமணத்துக்காக பெற்றோர் வேறு வரன் பார்த்தனர். இதற்கிடையே நர்சிங் மாணவியின் காதலனான ஜிதின் காதலி வீட்டிற்குச் சென்று பெண் கேட்டுள்ளார். அதற்கு நர்சிங் மாணவியின் பெற்றோர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், நர்சிங் மாணவிக்கு வேறு ஒருவருடன் நிச்சயதார்த்தம் நடந்தது. இதனை அறிந்த ஜிதின் காதலி வீட்டின் அருகில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அப்பகுதியினர் அதைப்பார்த்து போலீஸுக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸார் அங்கு சென்று ஜிதினின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

ஜிதின் தூக்கில் தொங்குவதை பார்த்த நர்சிங் மாணவி குளியலறைக்குச் சென்று விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
மாணவியை குடும்பத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஜிதினின் அண்ணன் ஜோபின் ஜெபி மார்த்தாண்டம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.