
புதுடெல்லி: காவிரி மேலாண்மை ஆணையத் தின் 40- வது கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே. ஹால்தர் தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரியை சேர்ந்த நீர்ப்பாசனத் துறை அதிகாரிகள் பங்கேற்றனர். தமிழக அரசின் சார்பில் நீர்வளத் துறை செயலாளர் ஜெயகாந்தன், காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் ஆர் சுப்பிரமணியம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் தமிழக அரசும் கர்நாடக அரசும் தங்களது வாதங்களை முன்வைத்தன. இதையடுத்து, தமிழக அரசின் வாதத்தை ஏற்றுகொண்ட காவிரி நீர் மேலாண்மை ஆணையத் தலைவர் எஸ்.கே.ஹல்தர், ‘‘உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி ஜூன் மாதத்தில் 9.19 டிஎம்சி நீரையும், ஜூலை மாதத்தில் 31.24 டிஎம்சி நீரையும் கர்நாடகா திறந்துவிட வேண்டும். மொத்தமாக 40.43 டிஎம்சி நீர் தமிழகத்துக்கு செல்வதை பிலிகுண்டுலு அளவை நிலையத்தில், கர்நாடக அரசு உறுதி செய்ய வேண்டும்'' என உத்தரவிட்டார்.