• May 23, 2025
  • NewsEditor
  • 0

‘இலவச பங்கு முதலீட்டுப் பயிற்சி, இலவச டிரேடிங் டிப்ஸ், குறுகிய காலத்தில் அசாத்தியமான வருமானம், பிரபலங்கள் பேசுவதுபோல போலி வீடியோ, போலி சமூக வலைதளப் பக்கங்கள் எனப் பற்பல ரூபங்களில் முதலீட்டாளர்களைக் குறிவைத்து மோசடி பேர்வழிகள் உலா வருகின்றனர். மக்கள் பணத்தை கோடி கோடியாகச் சுருட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதிக லாபத்துக்கு ஆசைப்பட்டு மோசடி பேர்வழிகளிடம் சிக்கிக்கொள்ளாதீர்கள்’ – இப்படி ஓர் எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது, இந்திய பங்குச் சந்தைக் கட்டுப்பாட்டு ஆணையமான செபி.

‘வரவேற்கத்தக்க எச்சரிக்கையே’ என்றாலும்… அடிக்கடி எச்சரிக்கைளை மட்டுமே வெளியிடும் அரசு மற்றும் அரசு அமைப்புகள்… மோசடிகளையும், மோசடிப் பேர்வழிகளையும் முற்றாக ஒழிக்க என்ன செய்திருக்கின்றன? ‘இது, டிஜிட்டல் இந்தியா… யுபிஐ தொழில்நுட்பம் மூலமாக உலகுக்கே வழிகாட்டுகிறோம்’ என்றெல்லாம் பெருமையாகச் சொல்லிக்கொள்கிறோம். ஆனால், அதே டிஜிட்டல் தளத்தில்தான் அத்தனை மோசடிகளையும் அரங்கேற்றுகிறார்கள். ஏன் தடுக்க முடியவில்லை? என்கிற கேள்விகளும் இயல்பாகவே எழுகின்றன.

‘தெலங்கானாவில் 72 வயதான ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி இணையதள மோசடியில் ரூ.3.37 கோடி பறிகொடுத்தார்’; ‘சென்னையில் தமிழக அரசின் ஓய்வுபெற்ற உயர் அதிகாரி ரூ.6 கோடியை இழந்தார்’ என்று வரும் செய்திகள்… நன்கு படித்த, உயர் பதவிகளை வகித்தவர்களும்கூட ஏமாற்றப்படுகின்றனர் என்பதையே காட்டுகின்றன. ஆக, விழிப்பு உணர்வும், தொழில்நுட்ப அறிவும் இருந்துவிட்டால் மட்டுமே மோசடியிலிருந்து தப்பிவிட முடியாது என்பதே நிதர்சனமாக இருக்கிறது. மோசடிகளைக் கண்டறியும் வலுவான கட்டமைப்பும், தொடர் கண்காணிப்பும், உடனடியான நடவடிக்கைகளுமே அவசியம் என்பதை அரசும் அரசாங்க அமைப்புகளும் உணர வேண்டும்.

நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கில், ‘வழக்குப் பதிவு செய்துள்ளோம்… விசாரிக்கிறோம் என்கிற சப்பைக்கட்டுகள் தேவையில்லை. பாதிக்கப்பட்டவர் களுக்குப் பணம் திரும்பக் கிடைக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்’ என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை, சமீபத்தில் சாட்டை வீசியுள்ளது. அரசாங்க எந்திரத்தைப் பொறுத்தவரை, இதுதான், இங்கே எதார்த்த நிலை.

தனிநபர், ஒரு செல்போன் சிம் கார்டை எளிதாக வாங்க முடிவதில்லை. ஆனால், மோசடி பேர்வழிகளுக்கு ஆயிரக்கணக்கான சிம் கார்டுகள் எங்கிருந்து கிடைக்கின்றன. 20,000 ரூபாய்க்கு மேல் பணப்பரிவர்த்தனை செய்தாலே, ரிசர்வ் வங்கியும் அதன் இணை அமைப்புகளும் சம்பந்தப்பட்டவரை, இணைய வழியில் ‘ஆட்டோமேட்டிக்’காகக் கண்காணிக்க ஆரம்பித்துவிடுகின்றன. ஆனால், லட்சம்… கோடி என்று அதே இணைய வழியில் கொள்ளையடிக்கும் மோசடி பேர்வழிகள் மட்டும் கண்டுகொள்ளப்படுவதில்லை.

கண்ணுக்குத் தெரியாமல் ஒளிந்துகொண்டிருக்கும் பயங்கரவாதிகளை எல்லாம் தேடிப்பிடித்து ஒழிக்கிறோம். ஆனால், இணையவெளியில் மொபைல் எண், மெயில் ஐடி. ஆதார் எண், வங்கிக் கணக்கு எண் என்று அத்தனை ஆதாரங்களுடனும் நடமாடும் இந்த ‘ஆன்லைன் பயங்கரவாதி’களை மட்டும் ஒழிக்கவே முடியவில்லை!

– ஆசிரியர்

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *