• May 23, 2025
  • NewsEditor
  • 0

90‘s கிட்டோ , 2K கிட்டோ இன்றைய இளைஞர்களை பெரிதும் பாதிக்கும் பிரச்னைகளின் பட்டியலில் பரவலாக இருப்பது முதுகுவலி. இளைஞர்கள் இதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்வதில்லை.

அப்படியே வீட்டில் இருப்பவர்களிடம் சொன்னாலும், ‘ஓடுற பாம்பை எட்டி புடிக்குற‌ வயசுல ஓடி ஆடி வேலைபாக்காம 70 வயசு கிழவனாட்டம் என்ன முதுகுவலின்னு சொல்லிட்டு உட்கார்ந்திருக்க’ என்று ஏளனம் பேசுவார்கள்.

இல்லையென்றால், ‘சரியா தூங்குறது இல்ல, எந்த நேரமும் செல்போனையே பார்த்துட்டு இருக்க; ரொம்ப நேரம் வண்டி ஓட்டிட்டுப் போற; நாள் முழுக்க உக்காந்துட்டே வேலைபாக்குற அதான் முதுகுவலி வந்திருக்கு’ என்று மருத்துவம் படித்தவர்கள் மாதிரி பேசுவார்கள்.

இவர்களுக்கிடையே ‘கால்சியம் சத்து எலும்புல குறைவா இருக்கும்’ என்று டாக்டர் ஆலோசனை இல்லாமலே மாத்திரைகளை வாங்கி முழுங்குகிற கூட்டமும் இருக்கிறது.

முதுகுவலி

சரி, இளம்வயதிலேயே ஏற்படக்கூடிய முதுகுவலியை, தானாக சரியாகி விடும் என்று கண்டுகொள்ளாமல் இருக்கலாமா? அப்படி இருந்தால் எதிர்காலத்தில் ஏதாவது ஆபத்து ஏற்படுமா என்பதை விவரிக்கிறார் சென்னையைச் சேர்ந்த எலும்பியல் சிகிச்சை நிபுணர் டாக்டர் ராஜேஷ் சௌத்ரி.

”முதுகுவலி ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். முதுகுவலி பிரச்னையை இரண்டு வகையாக பிரிக்கின்றனர். ஒன்று இயந்திர முதுகுவலி (mechanical back pain), மற்றொன்று நோயியல் முதுகுவலி (pathological back pain).‌ தசைகள், தசைநார்கள் அமைப்புகளின் செயல்பாடு மற்றும் நிலையைப் பொறுத்து ஏற்படும் வலியை இயந்திர முதுகுவலி என்று குறிப்பிடுவோம். நோயியல் முதுகுவலி என்பது, முதுகுப்பகுதியில் ஏதேனும் நோய் இருப்பின் அதன் காரணமாக ஏற்படக்கூடிய வலி.

சில நோய்த்தொற்று, பாக்டீரியா தொற்று காரணமாகவும் முதுகுவலி ஏற்படும்.

நம் முதுகு எலும்பு 33 குருத்தெலும்புகளால் ஒன்றிணைந்தது. இந்த எலும்புகளின் இடையே DISC என்றழைக்கக்கூடிய சவ்வுப்பகுதி அமைந்திருக்கும். அதிகளவு பளுவைத்தூக்குவது, நீண்ட நேரம் ஒழுங்கற்ற நிலையில் இருப்பது, தசைகள் பலவீனமாக இருப்பது போன்ற காரணங்களால் எலும்புகளுக்கு இடையில் இருந்து இந்த சவ்வுப்பகுதி வெளியே வந்து நீண்டு விடும். இதற்கு வட்டு நீட்டிப்பு (disc bulge) என்று பெயர். இந்த சமயங்களில் கடுமையான முதுகுவலி ஏற்படும். கூடவே இந்த வலியானது கை, கால்களுக்கும் பரவி கால்களை மரத்து (உணர்ச்சியற்று) போகவும் செய்யும். இது முதல் காரணம்.

ஸ்போண்டிலோலிஸ்டெசிஸ் (Spondylolisthesis) என்றழைக்கக்கூடிய முதுகெலும்புகள் ஒன்றின் மீது மற்றொன்று நகர்வது போன்ற காரணங்களாலும் முதுகுவலி ஏற்படும். இது இரண்டாவது காரணம்.

காசநோய் (TB) என்றாலே நுரையீரலைத்தான் பாதிக்கும் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அது உண்மையில்லை. காசநோய் முதுகுத்தண்டையும் பாதிக்கும். தவிர, சில நோய்த்தொற்று, பாக்டீரியா தொற்று காரணமாகவும் முதுகுவலி ஏற்படும். இவை மூன்றாவது மற்றும் நான்காவது காரணங்கள்.

முதுகுவலி
முதுகுவலி

முதுகெலும்பு மற்றும் இடுப்புக்கு நிலைத்தன்மையை வழங்கும் மைய தசைகள் (core muscles) மற்றும் முதுகெலும்பை இடுப்பு உடற்பகுதியுடன் இணைத்து இயங்க வைக்கும் முதுகு தசைகள் (spain muscles) ஆகியவை பலவீனமாக இருந்தாலும் முதுகுவலி ஏற்படலாம். இது ஐந்தாவது காரணம்.

பெரும்பாலான இளைஞர்கள் இந்த முதுகுவலி பிரச்னை வந்தாலே, அடுத்தவர்களின் அட்வைஸை கேட்டோ அல்லது விளம்பரங்களைப் பார்த்தோ, எங்களுடைய பரிந்துரை இல்லாமல் கால்சியம் சத்து மாத்திரைகளை எடுத்துக்கொள்கிறார்கள். முதுகுவலி உண்மையிலேயே கால்சியம் குறைபாடு காரணமாக ஏற்பட்டிருந்தால் கால்சியம் மாத்திரை எடுத்துக்கொள்வது நல்லது‌. ஆனால், வேறொரு பிரச்னையால் வலி ஏற்பட்டு இருந்தால் இந்த சத்து மாத்திரை பலன் தராது.

டாக்டர் ராஜேஷ் சௌத்ரி
டாக்டர் ராஜேஷ் சௌத்ரி

முதுகுவலி பிரச்னையை ஆரம்ப காலங்களில் கண்டறிந்தால் மருந்துகள் மூலமோ, பிசியோதெரபி சிகிச்சை மூலமோ, அல்லது சிறிய அறுவை சிகிச்சை மூலமோ குணப்படுத்திவிட முடியும். ஆனால், அப்படியே விட்டுவிட்டால் பின்னாளில் அது எலும்பு தேய்மானம், முதுகெலும்பு வளைந்து விடுவது, பக்கவாதம் ஏற்படுவது போன்ற மிக மோசமான நிலையை அடையக்கூடும். முதுகுவலி பிரச்னையால் அவதிப்படுபவர்கள் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்வதே சரி” என்கிறார் டாக்டர் ராஜேஷ் சௌத்ரி.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *