
மதுரை ஆரப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் திவ்ய பிரியா (29). இவர், அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின், மகள் வழி பேத்தி ஆவார். திவ்யாவுக்கு திருமணமாகி கார்த்திக் (வயது 30) என்கிற கணவர் உள்ளார். திவ்ய பிரியா தன் கணவர் மற்றும் உறவினர்களுடன், கடந்த மே 20-ம் தேதி சுற்றுலாவுக்காக நீலகிரி மாவட்டம், ஊட்டி சென்றனர். அங்கு 2 நாள்கள் இருந்த நிலையில், நேற்று (வியாழக்கிழமை) மாலை திவ்ய பிரியா குடும்பத்தினர் மதுரைக்கு புறப்பட்டனர்.
காரை கார்த்திக்கின் இளைய சகோதரர் பார்த்திபன் இயக்கியுள்ளார். அவர்கள் பயணித்த கார், குன்னூர் – மேட்டுப்பாளையம் சாலை, கல்லாறு அருகே முதல் கொண்டை ஊசி வளைவில் திடீரென கட்டுப்பாட்டை இழந்துள்ளது. எதிர்பாராத விதமாக தடுப்பு சுவரை முட்டி கார் கவிழ்ந்துள்ளது. இதில் பலத்த காயமடைந்த திவ்ய பிரியா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தில் திவ்ய பிரியாவின் கணவர் கார்த்திக் மற்றும் அவர்களின் உறவினர்கள் பரமேஷ்வரி, வளர்மதி ஆகியோரும் காயமடைந்தனர்.


தகவலறிந்த மேட்டுப்பாளையம் காவல்துறையினர், உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். திவ்ய பிரியாவின் உடல் மீட்கப்பட்டு, பிரதே பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து மேட்டுப்பாளையம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விபத்து சம்பவம் திண்டுக்கல் சீனிவாசன் குடும்பத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.