
சிங்கம்புணரி: பாரத மாடல் உலகத்துக்கே வழிகாட்டியாக மாறியுள்ளது என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார். சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரிக்கு நேற்று வந்த ஆளுநர் ஆர்.என்.ரவியை ஆட்சியர் ஆஷா அஜித், எஸ்.பி. ஆஷிஷ் ராவத், சிவகங்கை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் மதுராந்தகி நாச்சியார் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
தொடர்ந்து, சேவுகப்பெருமாள் அய்யனார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய ஆளுநர், கோயில் அருகேயுள்ள கோசாலையில் விடுதலைப் போராட்ட வீரர் வேலுநாச்சியார் படத்தை திறந்து வைத்து, பசுக்களுக்கு அகத்தி கீரை, பழங்களை வழங்கினார். பின்னர், சேவுகமூர்த்தி கோசாலை அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற 108 கோ பூஜை, யாகவேள்வியில் பங்கேற்றார். இதையடுத்து நடைபெற்ற விழாவில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் ஆசியுரை வழங்கினார்.