
கோவை: “தமிழக உரிமையை முதல்வர் ஸ்டாலின் ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டார். அதில் சமரசமும் செய்து கொள்ள மாட்டார். டெல்லியில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக முதல்வர் தமிழகத்தின் தேவைகளை எடுத்துக் கூறி தேவையான நிதியை பெற்றுத் தருவார்.” என பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார்.
கோவை ஆர்.எஸ்.புரம் ஆவின் விற்பனை அலுவலகத்தில் பன்னீர் சார்ந்த உணவு பொருட்கள் விற்பனையை ‘பன்னீர் ஹட்’ என்ற பெயரில், அமைச்சர் மனோ தங்கராஜ் இன்று (மே 22) தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: “தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கடந்த முறை கோவை வந்தபோது பன்னீர் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை திறந்து வைத்தார். தற்போது அந்த தொழிற்சாலையில் உற்பத்தி சிறப்பாக நடைபெறுகிறது.