• May 22, 2025
  • NewsEditor
  • 0

தூத்துக்குடியிலுள்ள வேதாந்தாவின் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு பொதுமக்கள் 100 நாட்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். 100வது நாளான கடந்த 2018-ம் ஆண்டு மே 22-ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்து குடியேறும் போராட்டத்திற்காக மாநகரின் பல பகுதிகளில் இருந்தும் மக்கள் பேரணியாகச் சென்றனர். அப்போது போலீஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளு கலவரமாக மாறியது.

துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்கள்

அப்போது தடியடி மற்றும் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில், 2 பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இதனையடுத்து ஆலையை மூடியது தமிழக அரசு. ஆனால், தற்போது வரை ஆலையை திறக்க நீதிமன்றத்தில் தொடர் சட்டப் போராட்டம் நடத்தி வருகிறது வேதாந்தா.

7-ம் ஆண்டு நினைவு தினம்

இந்த நிலையில், துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் 7-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. உயிரிழந்தவர்களின் கல்லறைகளில் சிறப்பு அஞ்சலி செலுத்தப்பட்டது. போராட்டம் நடைபெற்ற 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உயிரிழந்தவர்களின் உருவப் படங்களுக்கு மலர் தூவியும், மெழுவர்த்தி ஏந்தியும் அஞ்சலி செலுத்தப்பட்டது. பாதுகாப்பிற்காக மாநகரம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

7-ம் ஆண்டு நினைவஞ்சலி

இதுகுறித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் கூறுகையில், “முந்தைய சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின் போது தூத்துக்குடியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “தி.மு.க அரசு ஆட்சிக்கு வந்தவுடன் துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்குக் காரணமான குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். ஆனால், தி.மு.கவின் ஆட்சி முடிவடைய உள்ள நிலையிலும் எந்த நடவடிக்கையும் இல்லை.

ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசனின் அறிக்கையில் முன்னாள் ஆட்சியர், முன்னாள் எஸ்.பி., முன்னாள் டி.ஜி.பி., போலீஸார், வருவாய்த்துறையினர்களின் பெயர்கள் பதவியைக் குறிப்பிட்டும் ஆதாரப் பூர்வமான அறிக்கை தாக்கல் செய்தும் அதன் மீதும் எந்த நடவடிக்கையும் இல்லை.

பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ள போலீஸார்

துப்பாக்கிச்சுட்டில் பலியான 15 பேருக்கு நினைவு மண்டபம் அமைக்க வேண்டும், ஸ்டெர்லைட் ஆலையை முற்றிலுமாக தூத்துக்குடியில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும், அருணா ஜெகதீசன் அறிக்கை முழுவதுமாக நிறைவேற்றப்பட வேண்டும் என்ற எங்களின் எந்த கோரிக்கைக்கைக்கும் இந்த அரசு செவிமடுக்க வில்லை. தி.மு.க அரசு தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.” என்றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *