
அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில், நடிகர் சசிகுமார், நடிகை சிம்ரன், மிதுன் ஜெய் சங்கர், கமலேஷ், யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், ரமேஷ் திலக், பகவதி பெருமாள், இளங்கோ குமாரவேல், ஸ்ரீஜா ரவி எனப் பலர் நடிப்பில் வெளியான படம் `டூரிஸ்ட் ஃபேமிலி’.
ரசிகர்களிடம் நல்ல வரவேற்பையும், வசூலிலும் சாதனைப் படைத்து வருகிறது. இந்தப் படம் நடிகை சிம்ரனுக்கு நிச்சயம் கம்பேக் படம் எனும் அளவும் அவரின் அனுபவ நடிப்பும், ரசிகர்களின் கொண்டாட்டத்தையும் பார்க்க முடிந்தது.
இதற்கிடையில், நடிகை சிம்ரன் ஒரு விழா மேடையில் ஒரு நடிகையை பெயர் குறிப்பிடாமல் ‘டப்பா ரோல்’ என்ற வார்த்தையின் மூலம் குறிப்பிட்டு விமர்சித்திருந்தார்.
அந்த வீடியோ வைரலான நிலையில், சமுக ஊடகத்தில் ஒரு குறிப்பிட்ட நடிகையைதான் சிம்ரன் கூறுகிறார் என டப்பா கார்டல் படத்தில் நடித்த ஜோதிகாவை விமர்சித்து வந்தனர்.
இந்த நிலையில், நடிகை சிம்ரன் தனியார் செய்தி சேனல் ஒன்றுக்குப் பேட்டியளித்திருக்கிறார். அதில், “இங்கு எத்தனையோ வெப் சீரிஸ்கள் வருகிறது. அதில் ‘டப்பா கார்டெல்’ நல்ல வெப் சீரிஸ் என்று நினைக்கிறேன். நான் இன்னும் அந்த வெப் சீரிஸை பார்க்கவில்லை.
நான் அன்றைக்கு பேசியது ஏதோ திட்டத்துடன் பேசவில்லை. அது உண்மையிலேயே எனக்கு நடந்தது. நான் மற்றவர்களைப் பற்றி வெளியில் பேசுபவள் அல்ல. என் நண்பர்களும் என் பக்குவத்துக்கு ஏற்றதுபோல அப்படித்தான் இருப்பார்கள்.
எனவே, என் மனதில் இருக்கும் எண்ணத்தை பேசுவதற்கு அந்த மேடையைப் பயன்படுத்திக்கொண்டேன். நான் எப்போதும் எனது உலகத்தில் இருக்கவே விரும்புவேன். அந்த நடிகை பேசியது எனக்கு மிகவும் காயத்தை ஏற்படுத்தியது. அதனால்தான் அன்று நான் ஆழ்மனதில் இருந்து பேசினேன்.
அந்த நடிகை அவரது கருத்தைச் சொல்கிறார் என்பதை நான் புரிந்து கொள்கிறேன். ஆனால் அவர் அதை வெளிப்படுத்த தேர்வு செய்த வார்த்தைகள்தான் என்னை மிகவும் காயப்படுத்தியது.
அந்த சம்பவத்திற்கு பின்னர், சம்பந்தப்பட்ட நடிகையிடம் இருந்து மன்னிப்பு கேட்டு மெசேஜ் வந்தது. அதில், என்னைக் காயப்படுத்த வேண்டும் என அவர் அப்படி கூறவில்லை என்றார்.” என தெரிவித்துள்ளார்.