
சென்னை: சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், வீட்டுவசதி வாரியம், உயர் கல்வி துறையில் ரூ.870.60 கோடியில் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகள், கட்டிடங்களை திறந்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், ரூ.468.42 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின்கீழ் செயல்படும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் சென்னை கைலாசபுரம் திட்டப்பகுதி, விருதுநகர்- சம்பந்தபுரம், மதுரை – உச்சபட்டி , புதுக்கோட்டை- சந்தைப்பேட்டை, கள்ளக்குறிச்சி – கீரணூர்-2, திருப்பூர் – ஹைடெக் பார்க் நகர், காமராஜர்நகர் பெருந்தொழுவு, காஞ்சிபுரம் – சாலமங்கலம்-1, கடலூர் – கீழகுப்பம்-1 மற்றும் 2, பாலக்கொல்லை, திருவதிகை, ஈரோடு- கவுந்தப்பாடி, திருவாரூர்- கண்டிதம்பேட்டை, கரூர்-வேலம்பாடி திட்டப்பகுதிகளில் ரூ.527.84 கோடியில் கட்டப்பட்டுள்ள 4,978 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி மூலம் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.