
அ.தி.மு.க கரூர் மாவட்ட கலை இலக்கிய பிரிவு இணைச்செயலாளராக சுரேகா கே பாலச்சந்தர் என்பவர் பொறுப்பு வகித்து வருகிறார். இவர், கடந்த 2012 – ம் ஆண்டு தனது குடும்பத் தேவைக்காக, தனது நெருங்கிய உறவினர் அசோக்குமாரிடம் காசோலை கொடுத்து, ரூ. 9 லட்சம் கடன் பெற்றுள்ளார். இந்நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளாக நிதி நிறுவனத்திற்கு அசல் வட்டியை சரியாக கட்டி வந்த சுரேகா பாலச்சந்தர் கடந்த ஓராண்டாக இந்த நிறுவனத்துக்கு செலுத்த வேண்டிய அசல் மற்றும் வட்டித் தொகையை செலுத்தவில்லை என நிதி நிறுவனம் சார்பில் அசோக்குமார் கேட்டதற்கு, ‘நான் அ.தி.மு.க கட்சியில் முக்கிய நிர்வாகியாக இருக்கின்றேன். உன்னால் முடிந்ததை பார்த்துக்கொள். இனிமேல் பணம் நிதி நிறுவனத்திற்கு கட்ட முடியாது. நீ என்ன செய்ய வேண்டுமோ அதை செய்துக்கொள்’ என கூறியதாக சொல்லப்படுகிறது.
இதனால், கரூர் காசோலை விரைவு நீதிமன்றத்தில் அசோக்குமார் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்குக்காக ஆஜராக கோரி வழக்கறிஞர் மூலம் அனுப்பிய நோட்டீஸை சுரேகா பாலச்சந்தர் பெற மறுத்து, நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்து வந்துள்ளார். இதனால், நீதிமன்றம் மூலம் சுரேகா பாலச்சந்தருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், கரூர் நகர காவல் துறையினர் இன்று சுரேகா பாலச்சந்தரை கைது செய்து, கரூர் காசோலை விரைவு நீதிமன்றத்தில் நீதிபதி பரத்குமார் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். இந்நிலையில், வழக்கில் இனி தவறாமல் ஆஜராவேன் என தனது வழக்கறிஞர் மூலம் சுரேகா பாலச்சந்தர் உறுதிமொழி பத்திரம் தாக்கல் செய்ததை அடுத்து, நீதிபதி பரத்குமார் அவரை ஜாமீனில் விடுதலை செய்தார். கரூரில் அ.தி.மு.க நிர்வாகி ஒருவர் ரூ. 12 லட்சம் காசோலை மோசடி வழக்கில் நீதிமன்ற பிடிவாரண்ட்டில் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.