• May 21, 2025
  • NewsEditor
  • 0

‘அச்சுறுத்தும் மழை!’

பருவமழைக் காலம் தொடங்கிவிட்டதால் ஐ.பி.எல் இல் திடீரென ஒரு விதிமுறையை மாற்றியிருக்கிறார்கள். அதாவது, மழையால் பாதிக்கப்படும் போட்டிகளுக்கு ஏற்கனவே உள்ள 1 மணி நேரம் கூடுதல் நேரத்தோடு இன்னும் கூடுதலாக 1 மணி நேரத்தை வழங்கும் முடிவுக்கு வந்திருக்கிறார்கள். நேற்றைய போட்டியிலிருந்து இது அமலுக்கும் வந்திருக்கிறது. இந்த விதிமுறை மாற்றத்துக்கு கொல்கத்தா அணி அதிருப்தி தெரிவித்திருக்கிறது.

IPL – Rain

‘ஏற்கனவே உள்ள நடைமுறை…’

இதற்கு முன்பு வரை ஐ.பி.எல் இன் லீக் போட்டிகள் மழையால் பாதிக்கப்படும்பட்சத்தில் கூடுதலாக 1 மணி நேரம் மட்டுமே வழங்கியிருப்பார்கள். அதாவது, இரவு 7:30 மணிக்கு போட்டி தொடங்க வேண்டும் இல்லையா? மழையால் போட்டி பாதிக்கப்பட்டு திட்டமிட்டப்படி தொடங்க முடியவில்லையெனில், 8:40 மணி வரை காத்திருப்பார்கள். (போட்டிக்கு உரிய கூடுதல் ஒரு மணி நேரம் + இன்னிங்ஸ் ப்ரேக்கில் 10 நிமிடத்தை குறைத்து அதையும் இத்தோடு சேர்த்துவிடுவார்கள்.).

ஆக, 8:40 மணி வரை ஓவர்களை குறைக்கவே மாட்டார்கள். அதன்பிறகு ஓவ்வொரு 4.25 நிமிடங்களுக்கும் ஒரு ஓவர் என குறைந்துகொண்டே வரும். கடைசி Cut Off Time 10:56 மணி. அதற்குள் டாஸ் போடப்பட்டுவிட்டால் 5 ஓவர் போட்டியை நடத்திவிடலாம். இல்லையேல் போட்டியை கைவிட்டுவிடுவார்கள்.

IPL - Rain
IPL – Rain

‘புதிய மாற்றம்!’

இப்போதைய புதிய மாற்றத்தின்படி, மழையால் பாதிக்கப்படும் போட்டிகளுக்கு இன்னும் கூடுதலாக 1 மணி நேரத்தை வழங்கியிருக்கிறார்கள். அதாவது, 9:40 மணி வரைக்கும் ஓவர்கள் குறைக்கப்படாது. அதேமாதிரி, Cut Off Time 11:56 வரை. அதற்குள் டாஸ் போடப்பட்டால் 5 ஓவர் போட்டியை நடத்திவிடலாம்.

IPL - Rain
IPL – Rain

வழக்கமாக, ப்ளே ஆப்ஸூக்குதான் இப்படி கூடுதல் நேரத்தை கொடுப்பார்கள். ஆனால், இந்த முறை போட்டி நடக்கும் பல்வேறு நகரங்களில் மழை பெய்து வருவதால் எஞ்சியிருக்கும் லீக் போட்டிகளிலிருந்தே இந்த மாற்றத்தை கொண்டு வந்துவிட்டார்கள்.

இதற்குதான் இப்போது கொல்கத்தா அணி அதிருப்தி தெரிவித்திருக்கிறது. ஏனெனில், கடந்த மே 17 ஆம் தேதி பெங்களூரு – கொல்கத்தா போட்டி சின்னசாமியில் நடப்பதாக இருந்து மழையால் கைவிடப்பட்டது. அந்தப் போட்டியின் Cut Off Time இரவு 10:56 தான். அந்தப் போட்டி நடத்தப்படாமல் ஆளுக்கு ஒரு புள்ளி வழங்கப்பட்டதால் கொல்கத்தா அணி ப்ளே ஆப்ஸ் வாய்ப்பை இழந்து வெளியேறியது.

IPL - Rain
IPL – Rain

‘கொல்கத்தா அதிருப்தி!’

‘அந்தப் போட்டியில் இதேமாதிரி கூடுதல் நேரம் வழங்கப்பட்டு போட்டி நடந்து நாங்கள் வென்றிருந்தால் ப்ளே ஆப்ஸ் வாய்ப்பில் நீடித்திருப்போம். ஐ.பி.எல் நிர்வாகம் சீரான முறையில் முடிவுகளை எடுக்க வேண்டும்.’ என கொல்கத்தா அணியின் சிஇஓ வெங்கி மைசூர் பிசிசிஐயிடம் தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

கொல்கத்தா அணியின் வாதம் நியாயமானதே. பிசிசிஐ சரியான முன் திட்டமிடலின்றி சொதப்பியிருக்கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *