
பிரபு சாலமன் இயக்கிய ‘மைனா’ படத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்தவர் சேது. அவர் ஹீரோவாக நடித்துள்ள படம், ‘மையல்’. சம்ரிதி தாரா நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் பி.எல்.தேனப்பன், சூப்பர் குட் சுப்பிரமணி, ரத்னகலா, சி.எம்.பாலா ஆகியோரும் நடித்துள்ளனர். ஐகான் சினி கிரியேஷன்ஸ் எல்எல்பி தயாரித்துள்ள இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை ஜெயமோகன் எழுதியுள்ளார். ஏபிஜி ஏழுமலை இயக்கியுள்ளார். இது கல்வராயன் மலைப் பகுதியில் நடக்கும் கதையைக் கொண்ட படம். மலைக்கிராமத்தைச் சேர்ந்த நாயகன் திருடன்.
வெளியுலகம் தெரியாமல் பாட்டியுடன் வசிக்கும் நாயகிக்கும் அவருக்கும் காதல் வருகிறது. அந்த காதல் என்ன பிரச்சினைகளை இழுத்துவருகிறது என்பது கதை.இந்தப் படம் பற்றி நடிகர் சேது கூறும்போது, என் சினிமா மற்றும் தனிப்பட்ட வாழ்வை மாற்றிய படம் ‘மையல்’. என் முழு திறமையை வெளிக்கொண்டு வரும் கதாபாத்திரத்துக்காகப் பல வருடங்களாகக் காத்திருந்திருந்தேன். ‘மையல்’ படத்தில் அது நடந்திருக்கிறது. தமிழ் இலக்கியத்தில் முத்திரை பதித்திருக்கும் ஜெயமோகன் கதையின் ஒரு பகுதியாக இருப்பது எனக்குக் கிடைத்த ஆசீர்வாதமாகவே பார்க்கிறேன். நிச்சயம் அனைவரும் விரும்பும் படமாக இது இருக்கும்” என்றார்.