• May 20, 2025
  • NewsEditor
  • 0

சிங்கம்புணரி அருகே மல்லாக்கோட்டை பகுதியில் மேகா புளு மெட்டல் என்ற பெயரில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரி செயல்பட்டு வந்தது. இந்த குவாரியில் விதிமீறல்கள் நடப்பதாக ஏற்கனவே பல புகார்கள் எழுந்து வந்துள்ளது. இங்கு உள்ளூர் தொழிலாளர்கள் வட மாநிலத் தொழிலாளர்கள் என 50-க்கும் மேற்பட்டவர்கள் வேலை பார்த்து வந்தனர்.

சம்பவம் நடந்த குவாரி

ஏற்கனவே இப்பகுதியில் மழை பெய்திருந்த நிலையில் இன்று காலையில் பாறையை வெடி வைத்து உடைக்குமபோது பாறை உருண்டு மண் சரிவு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவில் சிக்கியவர்களை அப்பகுதி மக்களும், மீட்புப்படையினரும் தொடர்ந்து ஈடுபட்டு, கடும் சிரமத்துக்கிடையில் மீட்டனர். அதில் 5 பேர் உயிரிழந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அமைச்சர் ஆய்வு

சம்பவம் நடந்த குவாரியை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், காவல்துறை கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் உடன் வந்து அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களிடம், “மீட்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வருகிறது” என்று தெரிவித்தார்.

முருகானந்தம், கணேஷ், ஆறுமுகம், ஆண்டிச்சாமி, ஒரிசாவைச் சேர்ந்த அர்ஜித் ஆகியோர்உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

குவாரி பகுதியில் இறந்தவர்களை பார்வையிட உறவினர்களையும் செய்தியாளர்களையும் காவல்துறை அனுமதிக்காததால் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டது.

முதல்வர் நிதியுதவி

இதனிடையே, கல் குவாரியில் பாறை மற்றும் மண் சரிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின் ரூ.4 லட்சம் நிதியுதவியை அறிவித்துள்ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *