
மத்திய பிரதேச மாநிலம், சவாய் மாதோபூர் என்ற இடத்தை சேர்ந்தவர் விஷ்ணு சர்மா. இவருக்கு அனுராதா பஸ்வான் என்ற பெண்ணை பேசி முடித்து திருமணம் செய்தனர். திருமணம் இந்து முறைப்படி நடந்தது. பப்பு என்ற புரோக்கர் மணமகளை ஏற்பாடு செய்து கொடுத்தார். இதையடுத்து பப்புவிற்கு சர்மா இரண்டு லட்சம் கொடுத்தார். திருமணம் முடிந்தவுடன் அனுராதா தனது கணவன் வீட்டில் உள்ளவர்களுடன் மிகவும் அன்பாக நடந்து கொண்டார். இதையடுத்து குறுகிய காலத்தில் வீட்டில் உள்ள அனைவரின் நட்பையும் அனுராதா பெற்றார்.
திடீரென அனுராதா வீட்டில் இருந்த அனைவருக்கும் மயக்க மருந்து கலந்த சாப்பாட்டை கொடுத்து விட்டு வீட்டில் இருந்த ரூ.1.25 லட்சம் ஜூவல்லரி, 30 ஆயிரம் ரொக்க பணம், 30 மதிப்பு மதிப்பு மொபைல் போன் போன்றவற்றை திருடிக்கொண்டு தப்பி ஓடிவிட்டார். இது குறித்து சர்மா கூறுகையில், ”நான் தள்ளுவண்டியில் வியாபாரம் செய்கிறேன். கடன் வாங்கித்தான் திருமணம் செய்தேன். மொபைல் கூட கடனுக்குத்தான் வாங்கி இருந்தேன். அதனையும் எடுத்துச்சென்றுவிட்டார். அவர் என்னை மோசடி செய்வார் என்று நான் நினைத்துப்பார்க்கவில்லை. நான் பொதுவாக வேலை முடிந்து இரவில்தான் வீடு திரும்புவேன். சாப்பிட்ட பிறகு உடனே தூங்கிவிடுவது வழக்கம். வழக்கமாக நான் அதிகமாக தூங்க மாட்டேன். ஆனால் சம்பவம் நடந்த அன்று நான் அதிகமாக தூங்கிவிட்டேன்” என்று தெரிவித்தார்.
சர்மா இது தொடர்பாக போலீஸில் புகார் செய்தார். அப்புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். போலீஸாரே மணமகன் போல் நடித்து அப்பெண்ணை அணுகியிருக்கின்றனர். புரோக்கர் மூலம் அப்பெண்ணை திருமணம் செய்ய கான்ஸ்டபிள் ஒருவர் மணமகனாக நடித்தார். அவர் மூலம் அப்பெண் போபாலில் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அப்பெண்ணிடம் இருந்த திருமணம் தொடர்பான அனைத்து ஆவணங்களும் போலியானது என்று தெரிய வந்தது. அவரிடம் மேற்கொண்டு விசாரித்ததில் 7 மாதங்களில் 25 ஆண்களை திருமணம் செய்து மோசடி செய்திருப்பது தெரிய வந்தது. அனுராதா ஏற்கெனவே திருமணமானவர் ஆவார். அவர் தனது கணவரிடமிருந்து பிரிந்து வாழ்ந்தார். அவர் போபால் வந்த போது திருமண மோசடி கும்பலிடம் சேர்ந்தார். அக்கும்பல் அனுராதாவின் புகைப்படத்தை மணப்பெண் என்று கூறி அனைவருக்கும் அனுப்பி வைத்தனர். இதில் சிக்குபவர்களை போலி திருமணம் செய்து மோசடி செய்து வந்தது தெரிய வந்துள்ளது.