
புனித தலமாக விளங்கும் ராமேஸ்வரத்திற்கு நாள் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அமாவாசை தினங்கள் மற்றும் முக்கிய திருவிழா நாள்களின் போதும், கோடை விடுமுறையின் போதும் இந்த எண்ணிக்கை லட்சத்தை தொடும்.
இதையொட்டி கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் நூற்றுக்கணக்கான தனியார் தங்கும் விடுதிகள் உருவாகின. இவ்வாறு உருவாகியுள்ள தங்கும் விடுதிகள், உள்ளூரில் வசிக்கும் மக்களின் வீடுகளில் பயன்படுத்தும் கழிவு நீர்கள் உள்ளிட்டவை நேரடியாக அக்னி தீர்தகடலில் விடப்படுகிறது. மேலும் கோயிலில் பக்தர்கள் தீர்த்தமாடுவதன் மூலம் சேரும் நீரும் கடலிலேயே விடப்படுகிறது.
இதனால் பக்தர்கள் நீராடும் அக்னி தீர்த்த கடலில் கழிவுகள் கலந்து துர்நாற்றம் உருவாவதுடன், புனித நீராடல் என்ற பக்தர்களின் நம்பிக்கையும் கேள்விக்குறியாகும் நிலை உருவாகியுள்ளது.
இதையடுத்து அக்னி தீர்த்தத்தில் கழிவு நீர் கலப்பதை தடுக்க தமிழக அரசு, மத்திய அரசு மற்றும் உள்ளூர் பொது மக்களின் நிதி உதவியுடன் பாதாள சாக்கடை திட்டத்தை ஏற்படுத்த முடிவு செய்தது.
இதன்படி ரூ.9 கோடி செலவில் கடந்த 1999 -ம் ஆண்டு பாதாள சாக்கடை திட்டத்தை அப்போது உள்ளாட்சி அமைச்சர் பொறுப்பு வகித்த ஸ்டாலின் துவக்கி வைத்தார். இந்த திட்டத்திற்கான பொதுமக்கள் பங்களிப்பு நிதிக்காக கோயிலில் தீர்த்தமாடும் பக்தர்களிடம் தலா ஒரு ரூபாயும், மீன்பிடிக்க செல்லும் படகுகளுக்கு தலா 10 ரூபாயும் வசூலிக்கப்பட்டது.

அரசு மற்றும் பொதுமக்களின் பங்களிப்பு நிதி முழுமையாக வழங்கப்பட்டும் பாதாள சாக்கடை திட்டம் அடிக்கல் நாட்டப்பட்ட நிலையிலேயே இருந்து வந்தது.
இதன் பின் ஆண்டுகள் பல ஆனதால் இத்திட்டத்திற்கான மதிப்பீடு 55 கோடியாக உயர்ந்தது. இதனால் பாதாள சாக்கடை திட்டம் மீண்டும் கிடப்பில் போனது.
இதனால் ராமேஸ்வரம் பகுதியில் சேரும் கழிவு நீரானது மழை காலங்களின் போதும், அதிக பயன்பாட்டின் போதும் சாலையில் பெருக்கெடுத்து ஓடியதுடன், அக்னி தீர்த்த கடலிலும் நேரடியாக கலந்தது. இதனை தடுக்க பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்த நிலையில் தமிழக அரசு மீண்டும் பாதாள சாக்கடை பணிகளை துவக்கியது.
கடந்த ஆண்டில் துவக்கப்பட்ட பாதாள சாக்கடை பணிகள் பல்வேறு காரணங்களால் முழுமை பெறாமல் ஆமை வேகத்திலேயே நடந்து வருகிறது.
இதனை கண்டித்தும் பாதாள சாக்கடை திட்ட பணிகள் துவங்கி 25 ஆண்டுகளாக ஆன நிலையில் இன்னும் பயன்பாட்டிற்கு வராததை கண்டித்தும், பாதாள சாக்கடை பணிகளை விரைவு படுத்தி பயன்பாட்டிற்கு கொண்டு வர வலியுறுத்தியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கேக் வெட்டி நூதன போராட்டம் நடத்தினர்.

ராமேஸ்வரம் நகராட்சி அலுவலகம் முன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகர் செயலாளர் சி.ஆர்.செந்தில்வேல் தலைமையில் நடந்த இந்த நூதன போரட்டத்தில் மெழுகுவத்தி ஏற்றி கேக் வெட்டி கோஷமிட்டவாறு போரட்டம் நடத்தினர்.
இந்த போராட்டத்தில் கட்சி நிர்வாகிகள் முருகானந்தம், ஜீவானந்தம், செந்தில், வெங்கடேசன், தினேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.