
விவசாயத்திற்கு தேனிக்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. ஆனால் பூச்சிக்கொல்லி மருந்து மற்றும் மாறி வரும் சுற்றுச்சூழல் போன்ற காரணங்களால் தேனிக்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது. இதனால் விவசாய உற்பத்தியும் குறைந்துவிட்டது. இதனால் விளைச்சலை அதிகரிக்க அதிக அளவில் செயற்கை உரங்களை பயன்படுத்தவேண்டிய நிலை இருக்கிறது.
நாட்டில் 20 சதவீதம் அளவுக்கு தேனிக்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. இன்று தேனிக்கள் தினம் கொண்டாடப்படும் நிலையில் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த நிதின் குமார் சிங் என்பவர் இந்தியா முழுவதும் தேனிக்களை வாடகைக்கு விட்டு சம்பாதித்துக்கொண்டிருக்கிறார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பர்பங்கி என்ற இடத்தை சேர்ந்த நிதின் குமார் சுற்றுச்சூழல் பயோ-டெக்னாலஜியில் முனைவர் பட்டம் பெற்றுவிட்டு ஜெர்மன் மற்றும் இஸ்ரேலில் பணியாற்றினார்.
ஆனால் அந்த பணி அவருக்கு பிடிக்கவில்லை. சுற்றுச்சூழலை பாதுகாக்க தன்னால் முடிந்ததை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் விவசாயத்திற்கு உதவக்கூடிய தேனிக்களை விவசாயிகளுக்கு வாடகைக்கு விட்டு வருகிறார்.
‘வாடகைக்கு தேனி’ என்ற பெயரில் தொடங்கி இருக்கும் இத்திட்டத்தால் விவசாயிகளுக்கு விளைச்சல் அதிகமாக கிடைக்கிறது. தேனிக்கள் பயிர்களில் இயற்கையான முறையில் மகரந்த சேர்க்கையை அதிகரித்து விளைச்சலை அதிகரிக்க உதவுகிறது. நிதின் குமாரிடம் 600 தேனி பெட்டிகள் இருக்கிறது. இந்த பெட்டிகளை இந்தியா முழுவதும் எடுத்துச்சென்று விவசாயிகளுக்கு வாடகைக்கு விடுகிறார்.
பீகாரில் தக்காளி, லிச்சி பழ விவசாயிகள், ஹிமாச்சல பிரதேசத்தில் ஆப்பிள் விவசாயிகள் என அனைத்து வகையான பயிர்களுக்கு இந்த வாடகை தேனிக்கள் உதவி செய்கின்றன. ஒவ்வொரு தேனிப்பெட்டியிலும் பல்லாயிர தேனிக்கள் இருக்கும்.
`மகசூல் அதிகரிக்கும்’
இது குறித்து நிதின் குமார் கூறுகையில், ”தேனிக்கள் நமது கூட்டாளிகள். அவை இல்லாமல் நாம் இல்லை. எனவே அவற்றை நன்றாக புரிந்து கொண்டு அவற்றின் வேலையை செய்ய விட வேண்டும். தேனிக்கள் ஆரோக்கியமான இருக்க புதுத்தேன் தேவை. உயர் அழுத்த வயர்கள், மொபைல் டவர்கள் அருகில் இருக்கக்கூடாது.
பூச்சிக்கொல்லியும் பயன்படுத்தக்கூடாது. நான் மகரந்த சேர்க்கைக்காக இந்தியா முழுவதும் சென்றுள்ளேன். மணிப்பூரில் இருந்து மகாராஷ்டிரா வரை தேனிக்களை வாடகைக்கு எடுத்து சென்று இருக்கிறேன். தேனிக்களை பொறுத்தவரை அடிப்படையில் அவர்கள் சுற்றுலா பயணிகளை போன்றவர்கள். ஆப்பிள் விவசாயிகள் அதிக அளவில் தேனிக்களை பயன்படுத்துகின்றனர். இது தவிர நாக்பூர் ஆரஞ்ச் பழ விவசாயிகளும் தேனிக்களை அதிக அளவில் பயன்படுத்துகின்றனர்.

தேனிக்களை பொதுவாக இரவு நேரத்தில் இடமாற்றம் செய்வோம். ஒரு தேனிப்பெட்டியை ஒரு மாதத்திற்கு ரூ.2500க்கு வாடகைக்கு விடுவோம். 15 ஆயிரம் சதுர அடி நிலத்திற்கு 10 தேனி பெட்டிகள் தேவைப்படும். அக்டோபரில் இருந்து மே மாதம் வரை தேனிக்களின் தேவை அதிகமாக இருக்கும். ஜூன் முதல் செப்டம்பர் வரை தேனிக்களின் தேவை குறைவாக இருக்கும்”என்று தெரிவித்தார். தேனிக்களை வாடகைக்கு விடும் தொழிலில் ஒரு சிலர் மட்டுமே ஈடுபட்டுள்ளனர்.
லக்னோவை சேர்ந்த அகிலேஷ் குமார் என்பவர் இத்தொழிலில் ஈடுபட்டு வந்தார். ஆனால் தொழிலில் பல்வேறு சவால்கள் இருந்ததால் அத்தொழிலை இப்போது கைவிட்டுவிட்டார். விதை உற்பத்தி செய்யும் கம்பெனிகள் தான் அதிகமாக தேனிக்களை வாடகைக்கு எடுப்பது வழக்கம். நவீன விவசாயிகளும் தேனிக்களை அதிக அளவில் பயன்படுத்துகின்றனர் என்று ராஜஸ்தானை சேர்ந்த ராம் கிஷோர் என்பவர் தெரிவித்துள்ளார். இவரும் தேனிக்கள் தொடர்பாக வர்த்தகம் செய்து வருகிறார். தேனிக்களை பயன்படுத்துவதால் 20 முதல் 35 சதவீதம் மகசூல் அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.