
தூத்துக்குடி – நெல்லை நான்கு வழிச்சாலையில் வல்லநாடு துப்பாக்கிச்சுடும் தளம் உள்ளது. இதன் அருகே தனியாருக்குச் சொந்தமான தோட்டத்திற்கு செல்லும் பாதையில் நான்குவழிச்சாலையில் இருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் கார் ஒன்று எரிந்த நிலையில் நின்றதாக அந்த வழியாகச் சென்றவர்கள் முறப்பநாடு காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து போலீஸார் காரை சோதனை செய்தபோது காரின் பின்பக்க சீட்டில் எரிந்த நிலையில் ஒரு ஆண் சடலம் ஒன்று கிடந்தது.
இதனையடுத்து தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
அதைத் தொடர்ந்து எரிந்த நிலையில் மீட்கப்பட்ட ஆண் சடலம் பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
கைப்பற்றப்பட்ட ஆண் சடலத்தின் தலைப்பகுதி மற்றும் இடுப்புப்பகுதி எலும்பு மட்டுமே கிடைத்துள்ளதாகவும், மீதி பாகங்கள் எரிந்து சாம்பலாகி விட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே எரித்துக் கொல்லப்பட்டவருக்கு 30 வயது இருக்கலாம் என உரற்கூராய்வில் கூறப்பட்டுள்ளது. போலீஸாரின் விசாரணையில் அதிகாலை 5 மணி அளவில் அந்த இடத்தில் கார் எரிந்து கொண்டிருந்ததாக அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் கூறினர்.
யாரோ ஒரு நபரை மர்மநபர்கள் அழைத்து வந்து இந்த இடத்தில் வைத்து கொலை செய்து அவரது உடலை பின்சீட்டில் போட்டு காரை தீ வைத்து கொளுத்தி விட்டு சென்றிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

இதுகுறித்து முறப்பநாடு காவல் நிலைய போலீஸாரிடம் பேசினோம், “எரித்துக் கொல்லப்பட்டவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? காரில் கடத்தி எரிக்க என்ன காரணம்? என்பது குறித்து 3 தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகிறோம்” என்றனர். இச்சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.