• May 20, 2025
  • NewsEditor
  • 0

ரஷ்ய அதிபர் புதின் உடனான இரண்டு மணிநேர தொலைபேசி உரையாடலுக்கு பிறகு, அந்த தகவலை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உள்ளிட்ட ஐரோப்பிய நாட்டு தலைவர்களுக்கு அது குறித்து தெரிவித்துவிட்டதாக அமெரிக்க அதிபர் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.

இது குறித்து ஜெலன்ஸ்கி தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது,

“இன்று இருமுறை அமெரிக்க அதிபர் ட்ரம்பிடம் பேசினேன். ஒன்று, ட்ரம்ப் மற்றும் ரஷ்யாவின் தலைவர் உரையாடலுக்கு முன்பு. மற்றொன்று, உரையாடலுக்கு பிறகு. உரையாடலுக்கு பின்பான தொலைபேசி அழைப்பில் ஐரோப்பிய நாட்டு தலைவர்களும் கலந்து கொண்டனர்.

இது ஒரு முக்கியமான தருணம். உலகத்தால் இப்போது அதன் தலைவர்களால் உண்மையிலேயே போர் நிறுத்தம் மற்றும் நீடித்த அமைதியை கொண்டுவர முடியுமா என்பதை தெரிந்துகொள்ள முடியும்.

அமெரிக்கா – வெள்ளை மாளிகை

அமெரிக்காவிடம் உறுதி தெரிவித்துள்ளேன்…

அமெரிக்கா – உக்ரைனுக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தையின் தொடக்கத்தில், நான் அமெரிக்க அதிபர் ட்ரம்பிடம், உக்ரைன் முழு மற்றும் நிபந்தனையற்ற போர் நிறுத்தத்திற்கு தயார் என்பதை உறுதிப்படுத்திவிட்டேன்.

ரஷ்யர்கள் கொலைகளை நிறுத்த தயாராக இல்லையென்றால், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். ரஷ்யா மீது கொடுக்கப்படும் அழுத்தத்தின் மூலம் தான் உண்மையான அமைதி கிட்டும். இது உலகத்தில் இருக்கும் அனைவருக்குமே தெரியும்.

நல்ல முடிவை கொண்டுவர ரஷ்யா உடன் உக்ரைன் எந்த விதத்தில் வேண்டுமானாலும் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று பலமுறை கூறிவிட்டேன். துருக்கி, வாடிகன், சுவிட்சர்லாந்து – பேச்சுவார்த்தைக்கு தகுந்த இடமாக பார்க்கிறோம்.

இந்தப் பேச்சுவார்த்தைக்காக உக்ரைனையும், எங்களது பிரதிநிதிகளையும் சமாதானப்படுத்த வேண்டும் என்பது அவசியமில்லை. நாங்கள் பேச்சுவார்த்தைக்கு எப்போதும் தயாராகவே இருக்கிறோம். எங்களுக்கு ரஷ்யா பேச்சுவார்த்தை நடத்தத் தயாரா என்பது தான் தெரிய வேண்டும்.

அமெரிக்காவால் புதினுக்கு தான் லாபம்!

ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களோடு அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பேசினோம். பேச்சுவார்த்தையில் முன்வைக்கப்படும் ஒவ்வொரு கோரிக்கையை நேர்மையாக மதிப்பிட வேண்டும். அதனால் தான், பேச்சுவார்த்தையின் போது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடு பிரதிநிதிகள் கட்டாயம் இருக்க வேண்டும்.

ஆனால், அமெரிக்கா பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளாமல் இருக்கக்கூடாது. காரணம், அமெரிக்கா கலந்துகொள்ளாமல் போனால், அதனால் லாபம் அடைவது புதின் மட்டும் தான். இதற்கு ஆதரவு தெரிவிக்கும் அனைவருக்கும் நன்றி.

ரஷ்ய அதிபர் புதின், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்
ரஷ்ய அதிபர் புதின், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

ரஷ்யா போரை நிறுத்த சம்மதிக்காவிட்டால், போர் கைதிகளையும், அகதிகளையும் விடுவிக்காவிட்டால், புதின் நியாயமற்ற கோரிக்கைகளை முன்வைத்தால், ரஷ்யாவிற்கு போரை நிறுத்த விருப்பம் இல்லை என்று அர்த்தம். அதனால், அதற்கேற்றாற் மாதிரி ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, உலகம் ரஷ்யா மீது மேலும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

ரஷ்யா ஆரம்பித்தப் போரை நிறுத்த வேண்டும். அதை எப்போது வேண்டுமானாலும் தொடங்கலாம். உக்ரைன் எப்போதுமே அமைதிக்கு தயாராகவே உள்ளது” என்று கூறியுள்ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *