
அமெரிக்காவில் இருந்து இந்தியர்கள் தாய்நாட்டுக்கு பணம் அனுப்புவதைக் செலவு மிக்கதாக மாற்றும் ட்ரம்ப்பின் ‘ஒரு பெரிய அழகான மசோதா’ (One Big Beautiful Bill Act) மீதான வாக்கெடுப்பு நடந்துள்ளது.
இந்த மசோதா, அமெரிக்கர் அல்லாதவர்கள் செய்யும் அனைத்து பரிவர்த்தனைகளுக்கும் 5% வரி விதிக்க வழிவகை செய்கிறது. இதனால் குடியேறிகள் அல்லாத விசாதாரர்கள் (H1B போன்றவை), கிரீன் கார்ட் வைத்திருப்போர் அனைவரும் பாதிக்கப்படுவர்.
இந்த சட்டம் அமலுக்கு வந்தால், அமெரிக்காவில் இருந்து அனுப்பப்படும் பணத்தில் 5% எடுத்துக்கொள்ளப்படும். இதற்கு எந்த வரம்பும், விலக்கும் கிடையாது. அதாவது சிறிய தொகையாக இருந்தாலும், பெரும் பணமாக இருந்தாலும் 5% எடுத்துக்கொள்ளப்படும்.
ஆனால் பணம் அனுப்பும் நபர் அமெரிக்கராகவோ, அமெரிக்க குடியுரிமை பெற்றவராகவோ இருந்தால் இந்த 5% பிடித்தம் இருக்காது.
13 ஆயிரம் கோடி இழப்பு!
இந்த சட்டத்தால் அமெரிக்காவில் வசிக்கும் 32 லட்சம் இந்திய வம்சாவளியினர் உள்பட 45 லட்சம் இந்தியர்கள் பாதிக்கப்படுவார்கள்.
மார்ச் மாதத்தில் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வெளியிட்ட பண அனுப்புதல் கணக்கெடுப்பின்படி, 2023-24 ஆம் ஆண்டில் வெளிநாடுகளிலிருந்து மொத்தம் 118.7 பில்லியன் டாலர்கள் வந்திருக்கிறது. இதில் 28% அதாவது 32 பில்லியன் டாலர்கள் அமெரிக்காவிலிருந்து வந்துள்ளது.
32 பில்லியன் டாலர்களில் 5% என்றால், 1.6 பில்லியன் டாலர்கள். இந்திய சமூகத்துக்கு 13.6 ஆயிரம்கோடி ரூபாய் அளவில் இழப்பு ஏற்படவுள்ளது.
இந்த சட்டம் பணப் பரிமாற்றத்தை மட்டுமல்லாமல், முதலீட்டு வருமானத்தையும், பங்குகளிலிருந்து கிடைக்கும் வருமானத்தையும் பாதிக்கக் கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
One Big Beautiful Bill Act இந்தியர்கள் மற்றும் அமெரிக்கரல்லாத வெளிநாட்டவர்களைப் பாதிப்பது மட்டுமல்லாமல் பல்வேறு அம்சங்களைக் கொண்டுள்ளது. இதில் புலம்பெயர்ந்தோருக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன.