
நடிகர் விஷால் நடிப்பில் இந்தாண்டு தொடக்கத்தில் ‘மதகஜராஜா’ திரைப்படம் வெளியாகியிருந்தது.
இப்படத்திற்குப் பிறகு தன்னுடைய லைன் அப்களை விஷால் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தாலும் அத்திரைப்படங்கள் தொடர்பான படப்பிடிப்பு அப்டேட்கள் எதுவும் வெளிவரவில்லை.
இதை தாண்டி சமீப நாட்களாக விஷாலின் திருமணப் பேச்சுகளும் இணையத்தில் அடிப்பட்டு வந்தது.
சமீபத்திய ஒரு பேட்டியில்கூட 4 மாதங்களில் அவருக்குத் திருமணம் நடக்கவிருப்பதாக அறிவித்திருந்தார்.
நடிகர் சங்க கட்டடத்தின் வேலை முடிந்தப் பிறகுதான் திருமணம் எனக் கூறியிருந்தார் விஷால். தற்போது நடிகர் சங்கத்தின் கட்டடப் பணிகளும் முடியும் நிலையில் இருக்கிறது.
இன்று நடைபெற்ற ‘யோகி டா’ திரைப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் விஷால் சிறப்பு விருந்தினராக பங்கேற்றிருந்தார்.
இன்று காலை முதல் நடிகை சாய் தன்ஷிகாவைதான் நடிகர் விஷால் திருமணம் செய்யவிருக்கிறார் என்ற தகவல் இணையத்தில் பேசப்பட்டது. அதை உறுதிப்படுத்தும் வகையில் விழாவில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்கள் பலரும் விஷாலின் திருமணம் குறித்து சூசகமாக சில தகவல்களை பகிர்ந்திருந்தனர்.
சாய் தன்ஷிகா, தமிழில் ‘பேராண்மை’, ‘கபாலி’ உட்பட பல திரைப்படங்களில் நடித்து நமக்கு பரிச்சயமானவர்.

இயக்குநர் பேரரசு பேசுகையில், “இது படவிழாவா, நிச்சயதார்த்த விழாவா என்றே தெரியவில்லை. விஷால் சார், எனக்கு வருத்தம். கொஞ்ச நாள் கிசு கிசுவை பரவவிடணும். அதுக்கு அப்புறம்தான் இதை சொல்லணும். நீங்க பொசுக்குன்னு வந்து ஜோடியா உட்கார்ந்துடீங்க. நேரா கிளைமாக்ஸை இப்போவே விட்டுடீங்க!” எனக் கூறி விஷால் – தன்ஷிகா திருமணத்தை உறுதிப்படுத்தியிருக்கிறார். இவரை தொடர்ந்து மேடைக்கு வந்து நடிகை தன்ஷிகாவும் விஷாலுடனான திருமண தகவலை உறுதிப்படுத்தியிருக்கிறார். ஆகஸ்ட் 29-ம் தேதி இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெறவிருப்பதாகவும் அறிவித்திருக்கிறார்கள்.