
அதிகாலை நேரத்திலோ, அல்லது பூங்காவில் நடக்கும்போதோ, அல்லது இயற்கை சூழ்ந்த இடங்களுக்கு செல்லும்போதோ, நம் காதுகளை வருடும் பறவைகளின் ஒலி நம்மை அறியாமல் ஒருவித மகிழ்ச்சியை ஏற்படுத்தும். இந்த உணர்வை நாம் எல்லோருமே அனுபவித்திருப்போம். அந்த உணர்வுக்குப் பெயர் சாந்தம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். சாந்தம் என்றால் அமைதி. அதாவது, பறவைகளின் ஒலி நம் மனதுக்குள் விவரிக்க முடியாத அமைதியை ஏற்படுத்துவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
ஒவ்வொரு பறவையும் ஒவ்வொரு விதமாக ஒலி எழுப்பும் என்பது நமக்கெல்லாம் தெரியும். சில பறவைகளின் ஒலியை வைத்தே அதன் பெயரைச் சொல்லிவிட முடிந்த நம்மால், பல பறவைகளின் பெயர்களைக் கண்டுபிடிக்க முடியாது. ஆனால், அவற்றின் ஒலியை அனுபவிக்க முடியும். சரி, பறவைகள் ஏன் ஒலி எழுப்புகின்றன..?
”குளிர்காலம் முடிந்து வசந்தகாலம் ஆரம்பிக்கையில், விடியற்காலைகளில் பறவைகள் எல்லாம் தத்தம் குரல்களில் ஒலி எழுப்ப ஆரம்பிக்கும். அது விடியல் கோரஸ். மனிதர்களின் மனங்களை தன்பால் இழுக்கிற பறவைகளின் ஒலிகள், உண்மையில் அவற்றின் துணைத்தேடலுக்கான அழைப்பு. வழக்கமான காலங்களைவிட துணைப்பறவையைத் தேடும் வசந்த காலத்தில் பறவைகள் ஒலி இன்னும் சத்தமாக இருக்கும். யார் சத்தமாக ஒலி எழுப்பி துணையை ஈர்க்கிறோம் என்பதில் பறவைகளுக்குள் கிட்டத்தட்ட போட்டியே நிகழும். ஆண் பறவைகள், விலங்குகளைப்போலவே ‘இது என் பிரதேசம்’ என தன் ஆதிக்கத்தை நிலைநிறுத்தவும் அதிக சத்தத்தில் ஒலி எழுப்பும். மொத்தத்தில், பறவைகளின் போட்டி நம் செவிகளுக்கு விருந்து. வருடத்தில் பல மாதங்கள் குளிர் காலமாக இருக்கிற நாடுகளைவிட வெப்ப மண்டல நாடுகளில் வாழ்கிற பறவைகள், வசந்த காலங்களில் மட்டுமல்ல வருடம் முழுக்கவே விடியல் கோரஸை எழுப்பும்” என்கிறார் அமெரிக்காவைச் சேர்ந்த பறவையியல் வல்லுநர் ஜோர்டான் இ.ரட்டர்.

மற்றொரு பறவையியல் வல்லுநரான மைக் வெப்ஸ்டர், பறவைகளின் ஒலி அதிகாலையில் மட்டும் துல்லியமாக நம் காதுகளில் விழுவதற்கான காரணத்தை விளக்குகிறார். ”அதிகாலை நேரத்தில் காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால், அது குளிர்ச்சியாகவும் அடர்த்தியாகவும் இருக்கும். இந்த நேரத்தில் எழுப்பப்படுகிற பறவைகளின் ஒலி அதிகம் சிதையாத காரணத்தால், அது வெகு தூரம் தெளிவாகக் கேட்கிறது” என்கிற மைக், ”விடியற்காலைகளில் எல்லா பறவைகளும் ஒரே நேரத்தில் ஒலி எழுப்புவதில்லை. சில பறவைகள் சூரிய உதயத்துக்கு 45 நிமிடங்களுக்கு முன்னால் ஒலி எழுப்ப ஆரம்பிக்கும். சிலதோ அரை மணி நேரத்துக்கு முன்னால் ஒலி எழுப்ப ஆரம்பிக்கும். அதேபோல், எத்தனை பறவைகள் ஒலி எழுப்பினாலும், தங்கள் இனத்தின் ஒலியைக் கண்டறிகிற அளவுக்கு திறமையானவை” என்கிறார்.
சரி, நாம் பறவைகளின் ஒலிக்கும் மனிதர்களின் மனங்களுக்கும் இடையேயான ஆராய்ச்சிபற்றி பார்ப்போம்.

2022-ல் ஆண்டு, லண்டனில் நடந்த ஓர் ஆய்வில் 1,300 பேரை தினமும் 3 முறை என இரண்டு வாரங்களுக்கு பறவைகளின் ஒலியைக் கேட்க வைத்திருக்கிறார்கள். அப்போது அவர்களின் மனநலனில் பாசிட்டிவான மாற்றங்கள் நிகழ்ந்ததாக அந்த ஆராய்ச்சி குறிப்பிடுகிறது. இந்த மாற்றம் சில மணி நேரம் நீடித்ததாகவும், பறவைகளின் ஒலியைக் கேட்டபோது, அந்த 1,300 பேரும் இயற்கை சூழ்ந்த இடத்தில் இருப்பதுபோலவும் அருவிகளின் சத்தத்தைக் கேட்பதுபோலவும் உணர்ந்ததாகவும் அந்த ஆராய்ச்சி குறிப்பிடுகிறது. அதே வருடம் நகர்ப்புறத்தில் வசிக்கிற 295 பேரை, ஹெட்போன் மூலம் தினமும் 6 நிமிடங்கள் பறவைகளின் ஒலியைக் கேட்க வைக்க, ‘தங்களுடைய மன அழுத்தமும் பதற்றமும் குறைந்ததாகத்’ தெரிவித்திருக்கிறார்கள். இவர்களை 6 நிமிடங்கள் போக்குவரத்து இரைச்சலைக் கேட்க வைக்க, டிப்ரஷனாக உணர்ந்தார்களாம். இதே ஆராய்ச்சியை 2020-ல் நடத்தப்பட்டபோதும், இதே ரிசல்ட் தான் கிடைத்தது என்பது கூடுதல் தகவல்.
உயிரியல் அறிவியல் துறையில் பறவை மற்றும் பரிணாம சூழலியல் ஆராய்ச்சி செய்யும் இணைப் பேராசிரியரான கிளின்டன் பிரான்சிஸ் என்பவர், ”எங்கள் மாணவர்கள் செல்லும் பாதையில் பறவைகளின் ஒலியை எழுப்பும் ஸ்பீக்கர்களை வைத்துவிட்டோம். அவர்கள் அந்தப் பாதையைக் கடந்து வந்தபிறகு, அவர்களுடைய மனம் எப்படி உணர்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள, நாங்கள் தயாரித்த கேள்வித்தாளை வழங்கினோம். இதேபோல, நாங்கள் ஸ்பீக்கர் வைக்காத நேரத்தில் நடந்துவந்த மாணவர்களிடமும் நாங்கள் தயாரித்த கேள்வித்தாளை வழங்கினோம். ஆச்சரியமூட்டும்விதமாக, ஸ்பீக்கர்கள் அணைக்கப்பட்டிருக்கும் போது பாதையில் நடந்தவர்களைவிட, ஸ்பீக்கர் ஒலித்த நேரத்தில் நடந்த வந்தவர்களின் அறிவாற்றலும், மனத்தெளிவும் அதிகமாக இருந்தது” என்கிறார்.

லண்டனைச்சேர்ந்த சூழலியல் உளவியலாளர் சிண்டி ஃப்ரான்ஸ், ”பறவைகளின் ஒலிகள் நம்மை நிகழ்காலத்தில் நிறுத்துகிறது. அது நம்மை நாமே மறக்க வைக்கிறது. மன அழுத்தம் தொடர்பான நம் மூளையின் சில பகுதிகளின் செயல்பாட்டைக் குறைக்கிறது. ஒரு காட்டுக்குள் நீங்கள் பயணிக்கையில் பறவைகளின் ஒலி இசையாக ஒலிக்கிறது என்றால், நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம். ஒருவேளை அவற்றின் ஒலி இயல்புக்கு மாறாக இருந்தாலோ, அல்லது பறவைகள் ஒலியெழுப்பாமல் இருந்தாலோ, அங்கிருக்கிற பறவைகளோ அல்லது நீங்களோ பாதுகாப்பாக இல்லை என்று அர்த்தம். பறவைகளின் ஒலி நம் மன அழுத்தத்தைக் குறைத்து, இதயத்துடிப்பையும் ரத்த அழுத்தத்தையும் சீராக்குவதற்குக் காரணம், அவற்றின் ஒலி நாம் பாதுகாப்பாக இருக்கிறோம் என்பதை உணர வைப்பதால்தான்” என்கிறார்.
வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், இனி பறவைகளின் விடியற்காலை கோரஸை கேட்போம்.