• May 19, 2025
  • NewsEditor
  • 0

முல்லைப் பெரியாறு அணைப்பகுதியில் தமிழ்நாடு அரசு அதிகாரிகள் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள விடாமல் கேரள அரசு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தது. கேரளா அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இந்த மனுவும் பல மாதங்களாக விசாரிக்கப்பட்டு வந்தது.

இந்த விவகாரத்தில் இரண்டு மாநில அரசுகளும் தனித்தனியாக பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்திருந்த நிலையில், இன்று இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி சூரியகாந்த் தலைமையிலான மூன்று நீதிபதிகள் அடங்கிய சிறப்பு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

உச்ச நீதிமன்றம்

அப்போது பராமரிப்பு பணிகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள ஏதுவாக ஏதேனும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு இருக்கிறதா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த கேரளா அரசு தரப்பு வழக்கறிஞர், `முல்லைப் பெரியாறு பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக உள்ள வழிகாட்டி நெறிமுறைகளை கடைபிடிக்க தமிழ்நாடு அரசு தவறி வருகிறது’ என குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

அதற்கு பதில் அளித்த தமிழ்நாடு அரசு தரப்பு வழக்கறிஞர், “மரங்களை வெட்ட கேரளா முன்பு அனுமதி அளித்தது. தற்போது மத்திய அரசின் சுற்று சூழல் அனுமதி கோர வேண்டும் என்று கேரளா கூறுகிறது” எனக் கூறினார். அப்போது குறிப்பிட்ட நீதிபதிகள், `இந்த நீதிமன்றத்தில் அரசியல் ரீதியிலான உங்களது வாதங்களை முன்வைக்காதீர்கள்’ என கேட்டுக்கொண்டனர்

தொடர்ந்து உத்தரவுகளை பிறப்பித்த நீதிபதிகள், `முல்லைப் பெரியாறு அணை பகுதியில் உள்ள மரங்களை வெட்டுவதற்கு சுற்றுச்சூழல் அனுமதி கேட்டு தமிழ்நாடு அரசு அளித்த விண்ணப்பத்தின் மீது நான்கு வார காலத்திற்குள் மத்திய அரசு முடிவு எடுக்க வேண்டும். அதேபோல கேரளா அரசு உடனடியாக முடிவை எடுக்க வேண்டும்” என உத்தரவிட்டனர். மேலும் முல்லைப் பெரியாறு அணை வல்லக்கடவு காட்டுச் சாலையில் கேரளா அரசு சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். அத்தகைய பணியின் போது தமிழ்நாடு அரசு அதிகாரிகள் உடன் இருக்க வேண்டும். இதற்கு தேவையான நிதியினை தமிழ்நாடு அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும்” என உத்தரவிட்டனர்.

முல்லை பெரியாறு அணை

மேலும் “முல்லைப் பெரியாறு அணை மதகுகளை சீரமைப்பது மற்றும் மராமத்து பணிகளை மேற்கொள்வது ஆகியவற்றிற்கு ஏதுவாக அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் செல்ல இரண்டாவது படகை தமிழ்நாடு அரசுக்கு கேரளா வழங்க வேண்டும் என்றும் வேறு ஏதேனும் கோரிக்கைகள் இருந்தால் அதை முல்லைப் பெரியாறு மேற்பார்வை குழு உடனடியாக கூடி முடிவெடுக்க வேண்டும்” என உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்தனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *