
திருப்பத்தூர் மாவட்டம், திரியாலம் கிராமத்தின் அருகே மிகவும் சிதிலமடைந்த நிலையிலிருந்த பயணியர் நிழற்குடையால், பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளாகி வந்தனர். நாட்றம்பள்ளி, பச்சூர், பர்கூர் உள்ளிட்ட ஊர்களுக்குச் செல்லும் பயணிகள் இங்கு நின்று பேருந்துகளுக்காகக் காத்திருக்கும் நிலையில், சேதமடைந்த நிழற்குடையைப் பயன்படுத்த முடியாமல் வெளியே நிற்க வேண்டிய நிலை இருந்தது. இது குறித்து பொதுமக்கள் தொடர்ந்து வேதனை தெரிவித்து வந்தனர். இப்பகுதியில் தனியார்ப் பள்ளிகள், அரசு மருத்துவமனை, வங்கிகள் போன்ற முக்கிய நிறுவனங்கள் இருந்தும், நிழற்குடையின் பரிதாப நிலை கவனிக்கப்படாமல் இருந்தது. “நிழற்குடையில் நிற்பது மட்டுமல்ல, அருகே செல்வதற்கே அச்சமாக உள்ளது. எந்த அசம்பாவிதமும் நேரிடும் முன் இதைச் சீரமைக்க வேண்டும்,” என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
பொதுமக்களும் இது குறித்து குமுறிய நிலையில், “பல ஆண்டுகளாக இந்நிலை தொடர்கிறது. உயர் அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எவ்வித மாற்றமும் இல்லை. வார இறுதி நாட்களில் அருகிலுள்ள கடைகள் மூடப்பட்டிருக்கும் போது, வெட்ட வெளியில் நிற்க வேண்டியுள்ளது. சமீபத்தில் ஒரு மாணவி மீது இருசக்கர வாகனம் மோதிய சம்பவமும்… வெயிலும், பாதுகாப்பின்மையும் எங்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. அதிகாரிகள் எங்கள் சிரமங்களை கருத்தில் கொண்டு விரைந்து புதிய நிழற்குடை அமைக்க வேண்டும் என்பது எங்களது முக்கிய கோரிக்கை” என்றனர்.

நமது தரப்பில் இந்த விவகாரம் குறித்து, ஸ்பாட் விசிட் செய்து பொதுமக்களிடம் பேசி மார்ச் 2-ம் தேதி, “திருப்பத்தூர்: சிதிலமடைந்த பேருந்து நிழற்குடை; அச்சத்தில் பயணிகள்! – சீரமைக்கப்படுமா?” என்ற தலைப்பில் அவர்களின் சிரமங்களைச் சுட்டிக்காட்டியிருந்தோம். விகடன் செய்தி எதிரொலியாக (09/05/2025) அன்று அதிகாரிகள் பொதுமக்களின் நலன் கருதி விரைந்து புதிய பேருந்து நிழற்குடையைக் கட்டியுள்ளார்கள் . “இனிமேல் நாங்கள் பாதுகாப்பாக நின்று பயணம் மேற்க் கொள்வோம்” என்று இன்முகத்துடன் விகடனுக்கு நன்றி தெரிவித்தனர், பொதுமக்கள்.