
`பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு அவர்களுடைய சகோதரியை வைத்து பதில் சொல்லி இருக்கிறோம்’ என ராணுவ அதிகாரி சோபியா குரேஷியாவை மத்திய பிரதேச மாநில அமைச்சர் விஜய் ஷா மிக மோசமான முறையில் பேசி இருந்தார். ராணுவ அதிகாரி சோபியா குரேஷி இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர் என்பதால் தான் இவர் இவ்வளவு கீழ்த்தரமான ஒப்பிடை செய்திருந்தார். இது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்படுத்தி இருந்ததோடு, விஜய் ஷாவிற்கு எதிராகவும் பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்தது .
இந்த விவகாரம் தொடர்பாக தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்த மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் அமைச்சருக்கு எதிராக கடுமையான கண்டனங்களை தெரிவித்ததோடு, அமைச்சருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய உத்தரவு பிறப்பித்து இருந்தது. அதன் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த மத்திய பிரதேச காவல்துறையினர், அதில் பல்வேறு முக்கிய தகவல்களை தெரிவிக்காமல் இருந்ததைடுத்து காவல்துறையினருக்கும் மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் கண்டனங்களை தெரிவித்திருந்தது.
இந்நிலையில் மத்திய பிரதேச உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக அமைச்சர் விஜய் ஷா உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூரியகாந்த் மற்றும் கோடீஸ்வர் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், `அமைச்சர் தனது செயலுக்காக வருத்தம் தெரிவித்திருக்கிறார்’ என்றும் `பொதுவெளியில் அனைவரிடமும் மன்னிப்பு கோரி இருக்கிறார்’ என்றும் கூறினார்.

`முதலை கண்ணீரை நம்புவதற்கு தயாராக இல்லை’
அதை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், `மிக மிக மோசமான வார்த்தைகளை பேசிவிட்டு இப்போது மன்னிப்பு கேட்பதாக நீங்கள் கூறுவதை ஒருபோதும் ஏற்க முடியாது. மன்னிப்பு வழங்குவதற்கான அருகதை இல்லாத பேச்சை நீங்கள் பேசி இருக்கிறீர்கள். ஒரு பெண் ராணுவ அதிகாரி குறித்து மிகவும் மோசமான முறையில் உங்களது பேச்சு இருந்திருக்கிறது. உங்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருக்கிறது என்பதற்காகத் தான் அதிலிருந்து விடுபடுவதற்காக மன்னிப்பு கேட்கிறீர்கள். உங்களது இந்த முதலை கண்ணீரை நம்புவதற்கு நாங்கள் தயாராக இல்லை.
எனவே உங்களது மன்னிப்பை நாங்கள் முழுமையாக நிராகரிக்கிறோம். பொது வாழ்க்கையில் உள்ள ஒரு அமைச்சர் மற்றவர்களுக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டும்.
எனவே நீங்கள் உங்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருக்க கூடிய வழக்கை சந்தித்தே தீர வேண்டும்” என காட்டமாக கூறினார்கள்
நியாயமாக நடந்து கொள்ளுங்கள்
மேலும் அமைச்சரின் பேச்சு குறித்து விரிவாக விசாரணை நடத்த சிறப்பு குழுவை நாளை காலை 10 மணிக்குள் அமைக்க மத்திய பிரதேச டிஜிபிக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், `வெளி மாநிலத்தை சேர்ந்த ஐஜி தலைமையில் இந்த குழு இருக்க வேண்டும். இதில் உள்ள உறுப்பினர்கள் மாவட்டக் கண்காணிப்பாளர்கள் அல்லது அதற்கு மேல் இருப்பவர்களாக இருக்க வேண்டும். அவர்களும் மத்திய பிரதேசத்தை சேர்ந்த காவல்துறை அதிகாரிகளாக இருக்கக் கூடாது’ என தெளிவுபடுத்தினர் மேலும்

இந்தக் குழு இந்த விவகாரம் தொடர்பான விசாரணையை நடத்தி வரும் மே 28ஆம் தேதிக்குள் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என கூறி வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்தனர். மேலும் அமைச்சரை கைது செய்வதற்கு இடைக்கால தடையும் பிறப்பித்தனர்.
வழக்கு விசாரணையின் போது மத்திய பிரதேச மாநில அரசையும் கடுமையாக கடிந்து கொண்ட நீதிபதிகள், `உங்களது முதல் தகவல் அறிக்கையில் எந்த விவரமும் இல்லாமல் இருந்தது பற்றி மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் தலையிட்டு இருக்கிறது. ஒரு மாநில அரசு என்றால் அது மக்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும். நியாயமாக நடந்து கொள்ளுங்கள்’ என காட்டமாக கூறியிருந்தனர்