
இந்தியா-பாகிஸ்தான் இடையேயான மோதல் போக்கில் இருநாடுகளுடனும் வர்த்தகத்தை முன்வைத்து பிரச்சனையை தீர்த்து வைத்ததாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.
அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட முக்கிய வர்த்தகக் கூட்டாளிகளுக்கு விதிக்கப்படவிருந்த 27% வரியை 2025 ஏப்ரல் 10 முதல் 90 நாட்களுக்கு (ஜூலை 9 வரை) தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
இதற்கிடையில் போர்பன் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட அமெரிக்கப் பொருள்களின் மீதான வரிகளை இந்தியா குறைத்தது.
இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், “எந்த வர்த்தக ஒப்பந்தமும் இருதரப்புகளுக்கும் நன்மை தரும் வகையில் இருக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில், சமீபத்தில் Fox News-க்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேட்டியளித்திருக்கிறார்.
அதில்,“உலகின் மிக உயர்ந்த வரி விதிக்கும் நாடுகளில் ஒன்று இந்தியா. ஆனால், அவர்கள் அமெரிக்காவிற்கான வரிகளில் 100% குறைக்கத் தயாராக இருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? அது விரைவில் நடக்கும். நான் அவசரப்படவில்லை.
பாகிஸ்தானைச் சேர்ந்த மக்கள் நம்பமுடியாத பொருள்களை தயாரிக்கும் புத்திசாலிகள். அவர்களின் பொருள்கள் மீது 29% வரி விதிக்கப்படுவது பாகிஸ்தானிய ஏற்றுமதியை கடுமையாக பாதிக்கும் என்று அச்சுறுத்தல் நிலையில் கூட, அவர்கள் அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்ய விரும்புவார்கள்.

பாகிஸ்தான் ஏற்கெனவே 5 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருள்களை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்து, அதற்கு பதிலாக 2.1 பில்லியன் டாலர்களை மட்டுமே பெறுவதாக எழும் குற்றச்சாட்டுகள் உண்மையல்ல. நான் வர்த்தகத்தைப் பயன்படுத்தி (இந்தியா – பாகிஸ்தான் பிரச்சனையை) தீர்த்து சமாதானம் செய்கிறேன்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.