
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் காவனூர் பெரியத் தெருவைச் சேர்ந்தவர் தெய்வா என்கிற தெய்வச்செயல். இவர் தி.மு.க இளைஞரணியில் அரக்கோணம் மத்திய ஒன்றிய துணை அமைப்பாளராகவும், உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்றத்தின் நிர்வாகியாகவும் பொறுப்புகள் வகிக்கிறார்.
இந்த நிலையில், அரக்கோணம் அருகிலுள்ள 21 வயது கல்லூரி மாணவி, கடந்த 9-5-2025 அன்று ராணிப்பேட்டை எஸ்.பி அலுவலகத்திலும், 16-5-2025 அன்று அரக்கோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும் புகார் மனுக்களை அளித்திருக்கிறார்.
தெய்வா மீது அங்கு நடவடிக்கை எடுக்கப்படாததால் நேற்று முன்தினம் (17-5-2025) டி.ஜி.பி அலுவலகம் சென்று மீண்டும் புகாரளித்திருக்கிறார். தனது புகார் மனுவில், திருமண மோசடி, பல பெண்களுடன் தொடர்பு, உடல் முழுவதும் கடித்து சித்ரவதை, கொலை மிரட்டல் என தெய்வா மீது புகார்களை அடுக்கியிருக்கிறார் அந்த மாணவி.
அது குறித்து பாதிக்கப்பட்ட மாணவியிடமே பேசினோம். “நான் அரசுக் கல்லூரியில் பி.ஏ இங்கிலீஷ் இரண்டாம் ஆண்டு படிக்கிறேன். என் கூடப் படிக்கிற தோழி மூலமா 2024 நவம்பர் மாசத்துல தெய்வச்செயல் அறிமுகம் ஆனான். கொஞ்ச நாள்லயே `லவ் பண்றேன்’னு சொல்லி டார்ச்சர் பண்ணுனான். எனக்கு ஏற்கெனவே விவகாரத்து வழக்கு கோர்ட்டுல இருக்கிறதையும் தெய்வாகிட்ட சொல்லிட்டேன். `பரவாயில்ல. நான் உன்னை நல்லா பார்த்துக்கிறேன்’னு கட்டாயப்படுத்தி நம்பிக்கைக் கொடுத்தான்.
கடந்த 31-1-2025 அன்று ஒரு கோயிலுக்குக் கூட்டிக்கிட்டுப் போய் தாலி கட்டினான். இந்த வாழ்க்கையாவது சந்தோஷமா இருக்கணும்னு வேண்டிக்கிட்டு தெய்வாகூட போனேன்.
`ஏழு பொண்ணுங்கள அவன் ஏமாத்திருக்கிறது தெரியவந்தது’
ரெண்டு மூணு நாள்ல சென்னை வண்ணாரப்பேட்டைக்குக் கூட்டிக்கிட்டுப்போய், அமைச்சருக்கு உதவியாளர் ஒருத்தர்கிட்ட என்னை மனைவினு அறிமுகம் செஞ்சான். இன்னும் சில தி.மு.க பிரமுகர்கள்கிட்டயும் அறிமுகம் பண்ணுனான்.
அதுவரைக்கும் அவன் நோக்கம் என்னன்னு எனக்குத் தெரியாது. விசாரிச்சப்ப ஏற்கெனவே ஏழு பொண்ணுங்கள அவன் ஏமாத்திருக்கிறது தெரியவந்தது.
எனக்கு எல்லா உண்மையும் தெரிஞ்சிட்டதுனால, என்னை வீட்டுலயே அடைச்சி வச்சி சித்ரவதை பண்ணினான். உடம்பு முழுக்க கடிச்சி குதறிட்டான். மிரட்டியும் பாலியல் உறவில் ஈடுபட்டுக்கிட்டு வந்தான். `நான் சொல்ற நபர்கூட நீ படுக்கணும். அமைச்சர்கள் வரைக்கும் டச்ல இருக்கேன். என்னை யாராலயும் ஒன்னும் செய்ய முடியாது’னு மிரட்டினான்.

அப்பதான் முக்கிய பிரமுகர்கள்கிட்ட எதுக்கு அழைச்சிக்கிட்டுப் போய் காட்டினான்ங்கிற சுயரூபமே எனக்குத் தெரியவந்துச்சி. கடுமையான பிரிவுகள்ல எஃப்.ஐ.ஆர் போட்டு தெய்வச்செயலை கைது பண்ணனும். அவனால பாதிக்கப்பட்ட மற்ற பெண்களையும் காப்பாத்தணும். இவனால என் வாழ்க்கையே போய்டுச்சி. எல்லா ஆதாரங்களையும் கையில வச்சிருக்கிறேன்.
ஆனாலும், தெய்வா கட்சியில இருக்கிறதுனால போலீஸ் அவன்மேல நடவடிக்கை எடுக்காம என் பக்கமே தவறு இருக்கிற மாதிரி சித்திரிக்க முயற்சி பண்றாங்க’’ என்றார் கண்ணீருடன்.
இதற்கிடையே, தெய்வா மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்திருக்கும் அரக்கோணம் மகளிர் காவல் நிலையப் போலீஸார், அவரை கைது செய்வற்காக தனிப்படை அமைத்து தேடிக்கொண்டிருக்கின்றனர்.