
எம்.ஜி.ஆர் நடித்த மன்னர் கதையை கொண்ட படங்களில் ஒன்று, ‘அரச கட்டளை’. எம்.ஜி.ஆர் பிக்சர்ஸின் கதை இலாகா உருவாக்கிய இந்தப் படத்துக்கு வசனம் எழுதியவர் சொர்ணம். எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி.சக்கரபாணி இயக்கி, கவுரவ வேடத்தில் நடித்தார். சத்யராஜா பிக்சர்ஸ் தயாரித்த இந்தப் படத்தில் எம்.ஜி.ஆருடன் சரோஜாதேவி,ஜெயலலிதா, எம்.என்.நம்பியார், நாகேஷ், ஆர்.எஸ்.மனோகர், சி.டி.ராஜகாந்தம், ஃபிரண்ட் ராமசாமி, அசோகன், மாதவி, சந்திரகாந்தா, சகுந்தலா, குண்டுமணி என பலர் நடித்தனர். பி.எஸ்.வீரப்பாவுக்கும் கே.ஆர்.ராமசாமிக்கும் கவுரவ வேடம் என்றாலும் முக்கியமான கதாபாத்திரங்கள்.
டைட்டில் கார்டில் ‘அபிநய சரஸ்வதி’ என்று சரோஜாதேவிக்கும் ‘கவர்ச்சிக் கன்னி’ என்று ஜெயலலிதாவுக்கும் கேப்ஷன் வைத்திருந்தார்கள். குமரி நாட்டின் மன்னனான பி.எஸ்.வீரப்பாவுக்கு நாட்டில் நடப்பது எதுவும் தெரியவில்லை. அமைச்சர் ஆர்.எஸ்.மனோகர் மக்களுக்கு அதிக வரி விதித்து வாட்டி வதைக்கிறார். மக்கள் கொந்தளிக்கின்றனர். புரட்சி குழு உருவாகிறது. அந்தக் குழுவின் இளைஞரான எம்.ஜி.ஆர், ஒரு கட்டத்தில் நாட்டின் நிலைமையை மன்னனுக்கு எடுத்துக்கூற, மன்னன் அதிர்ச்சி அடைகிறார். பின்னர் மனம் மாறி, 'மக்களின் மனதறிந்த நீயே இனி மன்னன். இது அரச கட்டளை’ என்று கூறிவிட்டுத் தற்கொலை செய்துகொள்கிறார். ஆட்சிக்கு வருகிறார் எம்.ஜி.ஆர். பிறகு நடக்கும் சூழ்ச்சிகளை எப்படி முறியடிக்கிறார் என்று கதை செல்லும்.