• May 18, 2025
  • NewsEditor
  • 0

இமாச்சலப் பிரதேச மாநிலம் மண்டி மாவட்டத்தில் உள்ள கூன் கிராமத்தைச் சேர்ந்தவர் சகீனா தாக்கூர். வரலாறு பட்டதாரியான இவர், மாட்டுச் சாணம் மற்றும் பால் விற்பனை மூலம் மாதம் இரண்டு லட்சம் வருமானம் ஈட்டும் தொழில் முனைவோராக மாறியிருக்கிறார்.

“நான் சாதாரண குடும்பத்தில் தான் பிறந்தேன். எங்களது கிராமத்தில் உற்பத்தி செய்யப்படும் பால் தண்ணீராகவும், தரம் குறைந்ததாகவும் இருந்ததை கவனித்தேன்.

கல்லூரியில் படிக்கும்போது, ‘நல்ல தரமான பாலை வழங்கினால் எப்படி இருக்கும்?’ என்ற யோசனை எனக்குத் தோன்றியது. ஆனால், அதை எப்படி சாத்தியப்படுவது என்று அப்போது தெரியவில்லை.

வீட்டில் உள்ளவர்கள் அரசு வேலைக்குப் போக வேண்டும் என்று வற்புறுத்தினார்கள்… `படிச்ச பிள்ளை மாடு மேய்க்குது’ என்று அக்கம் பக்கத்தினர் கேலி செய்தனர்.

சகீனா தாக்கூர்

ஆனால், படித்து முடித்து சுகாதாரத் துறை சர்வேயராக சிறிது காலம் பணியாற்றிய நான் ரூ.1.25 லட்சம் சேமித்து வைத்திருந்தேன். அத்துடன் ரூ. 2 லட்சத்தை வங்கியில் இருந்து கடனாக வாங்கி பால் பண்ணையைத் தொடங்கினேன்.

பசு மாடுகள் வாங்கும்போது புரத சத்து நிறைந்த அதிக பால் தரக்கூடிய பசு மாடுகளைத் தேர்வு செய்தேன்.

அதிக பால் தரக்கூடிய இனமான ஹால்ஸ்டீன் ஃப்ரீசியன் பசுவுடன் இப்போது எங்களது பண்ணையில் அதிக பால் தரக்கூடிய 14 பசுக்கள் உள்ளன. அவை தினமும் 112 லிட்டர் பால் தருகின்றன.

அடுத்ததாக, எங்களது பண்ணையில் நவீன வசதிகளுடன் கூடிய கொட்டகையை அமைத்தேன். பால் கறக்கும் இயந்திரம், தீவனம் வெட்டும் இயந்திரம், பால் குளிர்விப்பான் ஆகியவற்றை வாங்கினேன்.

எங்கள் பண்ணையில் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி சாணத்தை கரிம உரமாக மாற்றி விற்பனை செய்தோம். எங்கள் ஊரில் 70-க்கும் மேற்பட்ட குடும்பங்களை ஒன்றிணைத்து பெண்கள் தலைமையிலான பால் கூட்டுறவு நிறுவனத்தைத் தொடங்கினோம்.

இதன் விளைவாக, எங்களுக்கு அரசாங்கத்திடம் இருந்தும் உதவி கிடைத்தது. இமாச்சலப் பிரதேச மாநில பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சில இயந்திரங்களையும், தொழில்நுட்பங்களையும் வழங்கி உதவியது.

சகீனா தாக்கூர்
சகீனா தாக்கூர்

மேலும், முதல்வர் சுக்விந்தர் சிங் சுகுவின் கொள்கைகளால் மாநிலத்தின் பால் கொள்முதல் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இப்போது எங்களுக்கு லிட்டருக்கு ரூ.41–44 கிடைக்கின்றது.

அதனால், இந்த விலை உயர்வு எங்கள் வருவாயை நன்றாக அதிகரித்துள்ளது. தற்போது. பால் மற்றும் சாணம் விற்பனை மூலம் மாதம் 2 லட்சம் வரை சம்பாதிக்கிறேன்” என்கிறார் சகீனா.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *