
ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம், ஹைதரபாத் பழைய நகரத்தில் உள்ள குல்சர் ஹவுஸ் அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர். இவர்களில் 8 பேர் குழந்தைகள். விபத்து நடந்த இடம் வரலாற்று நினைவுச் சின்னமான சார்மினார் அருகே இருக்கிறது. உயிரிழந்த அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தீ விபத்து குறித்து தெலங்கானா பேரிடர் மீட்பு மற்றும் தீயணைப்பு சேவைகள் டி.ஜி.நாகி ரெட்டி கூறுகையில், “குல்சார் ஹவுஸ் அருகில் உள்ள கிருஷ்ணா பேர்ல்ஸ் கடை மற்றும் வீடுகள் இருந்த கட்டிடத்தில் இந்த தீ விபத்து ஏற்பட்டது. அதிகாலை 6,30 மணியளவில் தீ விபத்து குறித்து தகவல் வந்தது. உடனடியாக அங்கு விரைந்தோம். தீயணைப்பில் 11 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டன. மக்களை மீட்க தீயணைப்புத் துறை சுவாசக் கருவிகள் மற்றும் ஆக்ஸிஜன் சிலிண்டர்களைப் பயன்படுத்தின.