
தென்காசி: “மதவாத சக்திகளை உறுதியாக எதிர்க்கும் தலைமையாக திமுக உள்ளது. அதனால் திமுக கூட்டணியில் உள்ளோம். கூட்டணியில் சில ஏமாற்றங்கள் இருப்பதை மறுப்பதற்கில்லை. தமிழகத்தின் எதிர்காலம் கருதி திமுக கூட்டணியில் உள்ளோம்.” என மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளோம்.
தென்காசி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ வீரகேரளம்புதூர் அருகே உள்ள கலிங்கப்பட்டியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: மத்திய அரசு நெடுஞ்சாலைகளில் உள்ள சில சுங்கச்சாவடிகளை அகற்றுவதாக வாக்குறுதி அளித்தது. ஆனால் அந்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் புதிதாக சுங்கச்சாவடிகளை அமைத்து வருகிறது. சுங்கச்சாவடிகளில் வசூலாகும் பணத்தை வைத்து சாலையையும் சரியான முறையில் சீரமைப்பதில்லை. இதை கண்டித்து தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடந்துள்ளது.