
கரூர் மாவட்டம், குளித்தலை சட்டமன்றத் தொகுதியில் வரும், கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட புனவாசிப்பட்டி அருகே இருக்கிறது சிந்தலவாடி. இந்த ஊராட்சியில் இருக்கும் காரவனத்தான் கோயில் தெருவில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கூடிய மே ஒன்றாம் தேதி முதல் கருப்புக் கொடி கட்டி கடந்த 18 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கரூர் மாவட்டம், லாலாபேட்டை அருகே உள்ள காவிரி ஆற்றில் இருந்து ஐந்து கி.மீ தொலைவில் உள்ளது சிந்தலவாடி. இந்த ஊராட்சி கிராமத்தில் தினந்தோறும் முறையான குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் குடிநீருக்காக இரண்டு கி.மீ தொலைவிற்கு பொதுமக்கள் தினந்தோறும் அலைந்து சென்று குடிநீர் எடுத்து வரவேண்டிய அவல நிலை நீடித்து வருகிறது.
புனவாசிப்பட்டி பகுதியில் இருந்து காரவனத்தான் கோயில் தெருவிற்கு வரும் சாலை கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக வெறும் மண் சாலையாக உள்ளது. இங்கே மழைநீர் வடிகால் வசதி இல்லாததால் மழைக்காலங்களில் மழை நீர் வடியாமல் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இது தவிர, மின் கம்பங்கள் இருந்தும் தெரு விளக்குகள் இல்லாததால் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.
இதுபற்றி மேலும் நம்மிடம் பேசிய அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் சிலர், “இங்கிருந்து பள்ளிக்குச் செல்லும் மாணவ, மாணவிகள், பணிக்குச் செல்லும் பொதுமக்கள் என்று பலரும் இதனால் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர். இது தொடர்பாக, கரூர் மாவட்ட ஆட்சியர், தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவு உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்ட மனுக்கள் இன்றளவும் கிணற்றில் போடப்பட்ட கல்லாக உள்ளன. இதனால், எங்களது அடிப்படைத் தேவைகள், தேவையான வசதிகளை அதிகாரிகள் செய்து தரும்வரை போராடுவது என்று முடிவெடுத்தோம். இதனால், கடந்த மே ஒன்றாம் தேதி சிறப்பு கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் வீடு தோறும் கருப்பு கொடி கட்டி கோரிக்கை மனுவினை அரசுக்கு அளித்தோம்.

ஆனால், கடந்த 18 நாட்களாக இதுவரை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த கூட வரவில்லை என்பதால், நாங்கள் கொந்தளிப்பில் உள்ளோம். எங்களை இந்த அரசும், அதிகாரிகளும் மதிக்கும் லட்சணம் இதுதான். நாங்கள் அஜித் நடித்த சிட்டிசன் படத்தில் வருகிற அத்திப்பட்டி கணக்காக அரசு அதிகாரிகளின் கவனத்துக்கு அப்பால் உள்ளோம். எங்களுக்கு உரிய தீர்வு கிடைக்கும் வரை போராட இருக்கிறோம். அடுத்தடுத்து வேறுவிதமான போராட்டங்களையும் முன்னெடுக்க இருக்கிறோம்” என்றார்கள்.