
பஹல்காம் தாக்குதலுக்கு எதிராக இந்தியா நடத்திய ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து உலக நாடுகளுக்கு விளக்கும் நோக்கில் இந்திய அரசு அனைத்துக்கட்சிகளின் குழு ஒன்றை உருவாக்கியிருக்கிறது. அதற்காக 7 கட்சிகளின் எம்.பி-களைத் தேர்வு செய்திருக்கிறது. திமுக சார்பில் எம்.பி கனிமொழி இந்தக் குழுவில் இருக்கிறார். இந்தக் குழுவுக்கு காங்கிரஸ் எம்.பி சசி தரூர் தலைமை தாங்குவார் என பா.ஜ.க அரசு அறிவித்திருக்கிறது.
இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்தே சலசலப்புகள் தொடங்கிவிட்டன. இந்தக் குழுவில் பங்கேற்க காங்கிரஸ் பரிந்துரைத்த 4 பேரில் யாரையும் தேர்வு செய்யாமல் சசி தரூரைத் தேர்வு செய்திருப்பது சர்ச்சையானது. இந்த நிலையில், அனைத்துக் கட்சி குழு விஷயத்தில் மத்திய அரசு அரசியல் செய்வதாக ஜெயராம் ரமேஷ் குற்றச்சாட்டியிருக்கிறார்.
இது தொடர்பாக பேசிய அவர், “காங்கிரஸ் கட்சியில் இருப்பதற்கும் காங்கிரஸ்காக கட்சியில் இருப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் சல்மான் குர்ஷித்தையும் பா.ஜ.க அரசு இந்தக் கூட்டத்தில் பங்கேற்க அழைத்தது. ஆனால் அவர், கட்சித் தலைமைதான் அதை முடிவு செய்யும் எனக் கூறிவிட்டார். கட்சியுடன் கலந்தாலோசிக்காமல் எம்.பி.க்களின் பெயர்களைச் சேர்க்க முடியாது. ஒரு ஜனநாயக அமைப்பில், தனிப்பட்ட எம்.பி.க்கள் அதிகாரப்பூர்வ குழுவில் அனுப்பப்படும்போது, எம்.பி.க்கள் கட்சியின் ஒப்புதலைப் பெற வேண்டும்.

ஆனால், பா.ஜ.க அரசு பெயர்களை கட்சி சார்பில் கொடுப்பதற்கு முன்பே முடிவு செய்திருக்கிறது. அப்படியானால், அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் உரிய நபர்களை தேர்வு செய்யக் கூறியது வெறும் நாடகம் மட்டுமே. தற்போது அரசின் நடவடிக்கை அரசின் நேர்மையின்மையையே காட்டுகிறது. நாங்கள் கொடுத்த நான்கு பெயர்களையும் மாற்ற மாட்டோம். பா.ஜ.க அரசு சிறப்பாக நாரதர் முனி அரசியலைச் செய்கிறது.
லோக் சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் ராஜ்ய சபா எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே ஆகியோர் ஆபரேஷன் சிந்தூர் பற்றி விவாதிக்க நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கோரும் கடிதங்களுக்கு எந்த பதிலும் அளிக்காத நிலையில், திடீரென்று பல கட்சி பிரதிநிதிகள் குழுக்கள் பற்றி கேள்விப்பட்டேன், இது அரசின் லட்சனத்தை விளக்குகிறது.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.