• May 17, 2025
  • NewsEditor
  • 0

சென்னை மாநகரில் தினமும் சேர்கின்ற குப்பைகளை பெருங்குடி மற்றும் கொடுங்கையூரில் கொட்டி வருகிறது மாநகராட்சி.

இதில் கொடுங்கையூரில் மலை போல் குவிந்து வரும் குப்பைகளை எரித்து, அதிலிருந்து மின்சாரம் தயாரிக்க முடிவு செய்திருக்கிறதாம் மாநகராட்சி நிர்வாகம். இதற்காக ஐதராபாத்தில் எரி உலை அமைத்து மின்சாரம் தயாரிக்கும் ஒரு நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டிருப்பதாகச்  சொல்கிறார்கள். இதற்காக சுமார் 1200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாம்.

ஆனால், ‘எங்கள் ஏரியாவிலிருந்து குப்பை மேட்டை அகற்றுவோம்’ என தேர்தல் வாக்குறுதி தந்தது திமுக. சேர்கின்ற குப்பையாலேயே பல உடல் பிரச்னகளைச் சந்தித்து வருகிற சூழலில், எரி உலை வந்தால் எங்களுக்கு அது இன்னும் ஆபத்து’ என இந்தத் திட்டத்தை எதிர்க்கிறார்கள் கொடுங்கையூர் பகுதி மக்கள். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வட சென்னை மாவட்ட நிர்வாகிகள் இதற்காக கையெழுத்து இயக்கத்தை தொடங்கியிருக்கின்றனர்.

அரசியல் கட்சிகளுடன் வட சென்னையில் இயங்கி வரும் பலவேறு சமூக அமைப்புகளும் அவர்களுடன் கைகோர்த்திருக்கின்றனர்.

தொடர்ந்து வடசென்னையின் பல்வேறு பிரச்னைகளுக்காகக் குரல் கொடுத்து வரும் சமூக செயற்பாட்டாளர் எ.த.இளங்கோவிடம் இந்தப் பிரச்னை குறித்துக் கேட்டோம்.

”நான் தீவிரமான திமுக அனுதாபிதான். எனக்கு வயசு இப்ப 54. வடசென்னையிலேயே பிறந்து வளர்ந்தவன். தேர்தல் வர்றப்பெல்லாம் இங்க இருந்து குப்பை மேட்டை அகற்றிடுவோம்னு தேர்தல் அறிக்கையில சொல்லும் திமுக. ஆனா தேர்தல் முடிஞ்சதும் அந்த வாக்குறுதி பத்தி மறந்துடுவாங்க. நாங்களும் நடையாய் நடந்ததுதான் மிச்சம் குப்பை மேல மேல குவிஞ்சிட்டேதான் இருக்கு.

எ.த.இளங்கோ

குப்பை சேர்றதால இந்தப் பகுதியில்  வாழ்கிற மக்கள் ஏற்கெனவே பலவிதமான சுவாசப் பிரச்னைகளைச் சந்திச்சுட்டு வர்றாங்க. பிறக்கிற குழந்தைகளே பாதிக்கப்படுறாங்க.

எரி உலை வந்தா பிரச்னை மேலும் அதிகரிக்கும்ங்கிறதுல எந்தச் சந்தேகமும் இல்லை. தோல் பிரச்னைகள்ல இருந்து புற்று நோய், பெண்களுக்குக் கருச் சிதைவுன்னு பல சிக்கல்களுக்கு வாய்ப்பிருக்குன்னு சொல்றாங்க. அதனாலதான் எரி உலை வேண்டாம்னு சொல்றோம். ஆனா ‘கருத்து கேட்பு கூட்டம்’ மாதிரி எதுவும் நடத்தாமலேயே மாநகராட்சி இப்படியொரு முடிவை எடுத்திருக்கு.

இது ரொம்ப தப்பு. மாநகராட்சி சார்பா கவுன்சிலர்களை ஐதராபாத் கூட்டிட்டுப் போயிருக்காங்க. அங்க எரி உலை எபப்டி செயல்படுதுங்கிறதை பார்க்க கூட்டிட்டுப் போயிருக்காங்க. வடசென்னை மதிமுக பிரமுகரும் கவுன்சிலருமான ஜீவனும் அங்க போனார்.

அவர் இங்க வந்த மறுநாளே துரை வைகோ இந்தத் திட்டத்துக்கு எதிரா அறிக்கை வெளியிட்டார். இதுல இருந்தே இந்தப் பிரச்னையின் தீவிரத்தை மாநகராட்சி உணர்ந்திருக்கணும். ஆனா அது உணர்கிற மாதிரி தெரியலை.

சென்னை மேயர் பிரியா வடசென்னையைச்  சேர்ந்தவர்ங்கிற  முறையில் அவரிடம் முறையிடலாம்னு கம்யூனிஸ்ட் தோழர்கள் போயிருக்காங்க.. அப்ப ‘இது கொள்கை முடிவு’ன்னு  சொன்னாங்களாம்.

என்னைக் கேட்டா வடசென்னை ஜனங்களைக் கொல்லற முடிவுன்னு சொல்வேன்.

மேயர் பிரியா

அதேபோல என்னுடைய சொந்த அனுபவத்துல இருந்தும் ஒரு விஷயத்தை இங்க பதிவு பண்ணியாகணும். துணை மேயர் மகேஷ்குமார் பதவி ஏத்ததுல இருந்து இப்ப வரை எந்தவொரு பிரச்னைன்னாலும் சரி, வடசென்னைப் பகுதின்னா வரவே மாட்டார். ஏதாவது சாக்கு சொல்லி தவிர்த்துடுவார். பல முறை நிகழ்ச்சிகளுக்குக் கூப்பிட்டு மறுத்திருக்கார். இந்தப் பகுதிக்கு வர்றதையே அவர் விரும்பறது இல்ல. அப்படிப்பட்டவர் வடசென்னை தொடர்பான இந்த திட்டத்தின் பொருட்டு ஏன் ஐதராபாத் போகணும்? அவரும் போய் வந்திருக்கார்.

எது எப்படின்னாலும் இந்த திட்டத்தை வரவிடக் கூடாதுங்கிறதுல எங்க பகுதி மக்கள் தீவிரமா இருக்காங்க. இந்த விஷயத்துல கட்சி வித்தியாசமெல்லாம் கிடையாது. திமுக காரன் நானே முன்னாடி நிக்குறேன்னா பார்த்துக்கோங்க.

அதனால மாநகராட்சி இந்த விவகாரத்துல நல்லதொரு முடிவை எடுத்தா மட்டுமே திமுக அரசுக்கு ஆது நல்லது. இல்லாட்டி வரப் போற சட்டசபைத் தேர்தல்ல எங்க பகுதி மக்களின் கோபத்துக்கு கட்சி ஆளாக வேண்டி இருக்கும்’ என்கிறார் இளங்கோ.  

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *