
‘ரஷ்யா – உக்ரைன் போர் நிற்கப்போகிறதா?’, ‘புதினும், ஜெலன்ஸ்கியும் நேரில் சந்தித்து கொள்ளப்போகிறார்களா?’ என்கிற எதிர்பார்ப்புகளை கிளப்பிய ரஷ்யா – உக்ரைன் நாடுகளின் சந்திப்பு நடந்து முடிந்திருக்கிறது.
ஆனால், இதில் ரஷ்யா அதிபர் புதினும் கலந்துகொள்ளவில்லை… உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் கலந்துகொள்ளவில்லை.
கடந்த வார இறுதியில், உக்ரைனின் தலைநகரான கீவில் ஐரோப்பிய நாடுகள் கலந்துகொண்ட கூட்டம் ஒன்று நடந்தது. அதில், ‘புதின் உடனடியாக 30 நாள் போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும்… இல்லையென்றால், ரஷ்யா மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்’ என்று அந்தக் கூட்டத்தில் ஐரோப்பிய நாடுகள் எச்சரித்தது. இதற்கு அமெரிக்க அதிபர் ட்ரம்பும் ஆதரவு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதன் விளைவாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை (மே 11), புதின் துருக்கியில் ஜெலன்ஸ்கியை சந்திக்கத் தயார் என்று அழைப்புவிடுத்தார்.
ட்ரம்பின் அவசரம்
உடனடி 30 நாள் போர் நிறுத்தத்திற்கு ரஷ்யா ஒப்புகொண்டால் தான் இந்தப் பேச்சுவார்த்தை நடக்கும் என்று ஐரோப்பிய நாடுகள் முட்டுக்கட்டை போட்டன. ஆனால், ட்ரம்போ, உடனடியாக இந்தப் பேச்சுவார்த்தை நடக்க வேண்டும் என்று அவசரப்படுத்தினார்.
இதனால், வேறு வழியில்லாமல், “முழு மற்றும் நீடித்த போர் நிறுத்தத்திற்காகக் காத்திருக்கிறோம். இன்னும் மரணங்களை நீடிப்பதில் அர்த்தம் இல்லை. வியாழக்கிழமை புதினுக்காகத் துருக்கியில் காத்திருப்பேன். இந்த முறை ரஷ்யர்கள் எந்தச் சாக்குப்போக்கையும் தேட மாட்டார்கள் என்று நம்புகிறேன்” என்று ஜெலன்ஸ்கி இந்தப் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்டார்.
ஜெலன்ஸ்கி ‘பிரசென்ட்’; புதின் ‘ஆப்சென்ட்’
பேச்சுவார்த்தைக்கு ஒப்புகொண்டதுப்போல, வியாழக்கிழமை (மே 15) துருக்கியில் ஜெலன்ஸ்கி ‘டான்’ என ஆஜராகிவிட்டார். ஆனால், ரஷ்யாவில் இருந்து வந்தக் குழுவில் புதினின் பெயர் இடம்பெறவில்லை… அவர் வரவும் இல்லை.
இதனால், உலக நாடுகளே பரபரத்தது. காரணம், புதின் தான் முதலில் ஜெலன்ஸ்கியை சந்திப்பதாக கூறினார்… இடமும் நிர்ணயம் செய்தார். ஆனால், கடைசியில் அவரே அந்தப் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை.
இதனால், பேச்சுவார்த்தையில் ஜெலன்ஸ்கி கலந்து கொள்ளமாட்டார் என்று முடிவானது. முடிவு செய்யப்பட்ட பேச்சுவார்த்தை ஒரு நாள் தள்ளி நேற்று துருக்கி இஸ்தான்புல்லில் இரு நாட்டு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் மட்டும் நடந்தது.

பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன?
இந்தப் பேச்சுவார்த்தையில் புதினின் நண்பரான விளாடிமிர் மெடின்ஸ்கி ரஷ்யக் குழுவிற்கு தலைமை தாங்கினார். உக்ரைன் குழுவிற்கு உக்ரைனின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ருஸ்டெம் உமெரோவ் தலைமை தாங்கினார்.
இருநாடுகளுக்கும் இடையே விறுவிறுப்பான பேச்சுவார்த்தை நடந்தது. ரஷ்யா சில கோரிக்கைகளை வைக்க… உக்ரைன் ‘போர் நிறுத்தத்தை’ முன்வைத்தே பேசியது. இந்த இடத்தில் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதாவது, உக்ரைனில் ரஷ்ய மொழி அதிகளவில் பேசப்படும் ஒரு மொழி ஆகும். பெரும்பாலான உக்ரைன் மக்களுக்கு ரஷ்ய மொழி தெரியும்.
ஆனால், இந்தப் பேச்சுவார்த்தையில் உக்ரைன் குழுவினர் ரஷ்ய மொழியில் பேசுவதை தவிர்த்துவிட்டனர். இவர்கள் உக்ரைன் மொழியில் பேச, இரு நாட்டிற்கு இடையேயும் மொழிபெயர்பாளர் பாலமாக இருந்துள்ளார்.
என்ன முடிவு எடுக்கப்பட்டது?
ஒரு வழியாக பேச்சுவார்த்தை முடிய, ரஷ்யா குழுவிற்கு தலைமை தாங்கிய விளாடிமிர் மெடின்ஸ்கி, ‘இரு நாடுகளும் 1,000 போர் பணய கைதிகளை விடுவிக்கும். உக்ரைனின் கோரிக்கையான இரு நாட்டு தலைவர்களின் சந்திப்பு குறித்து பரிசீலிக்கப்படும். இரு நாடுகளும் போர் நிறுத்தம் குறித்து தங்களது பார்வைகளை ஒரு ஆவணமாகச் சமர்ப்பிக்க ஒப்புகொண்டோம்” என்று தெரிவித்தார்.
இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, போலாந்து நாட்டு தலைவர்கள் பேசும்போது, ரஷ்யா பேச்சுவார்த்தையின் போது வைத்த கோரிக்கையான, ‘ரஷ்யா கைப்பற்றிய நான்கு உக்ரைன் பகுதிகளை முழுவதுமாக ரஷ்யாவிற்கே உக்ரைன் தரவேண்டும் என்பதை ஏற்றுகொள்ள முடியாது’ என்று கருத்து தெரிவித்தனர்.

இந்தப் பேச்சுவார்த்தை முடிவுக்கு பிறகு, பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட அனைவரும் அமெரிக்க அதிபர் ட்ரம்பிடம் தொலைபேசியில் பேசினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆக, இந்தப் பேச்சுவார்த்தையின் முக்கிய நோக்கம் மற்றும் ஒட்டுமொத்த ரஷ்யாவை தவிர்த்த ஐரோப்பிய நாடுகள், அமெரிக்க அதிபர் ட்ரம்பின் நோக்கமான ‘போர் நிறுத்தம்’ எட்டப்படமாலே, இந்தப் பேச்சுவார்த்தை முடிந்துவிட்டது.
ரஷ்யா என்ன நினைக்கிறது?
ரஷ்ய அதிபர் புதின் தன் மீதும், தன் நாட்டின் மீதும் விழும் அழுத்தத்தைத் தற்காலிகமாக நிறுத்தத் தான், தான் ஜெலன்ஸ்கியை சந்திப்பதாக அறிவித்துள்ளார்.
ரஷ்யாவைப் பொறுத்தவரை, அவர்கள் தங்களது நிலைப்பாட்டில் இருந்து இறங்கி வர துளிக்கூட விரும்பவில்லை. அதனால் தான், அவர்கள் தங்களது கோரிக்கைகளையும், நெருக்கடிகளையும் அதிகரித்து வருகின்றனர்.
உக்ரைன் என்ன சொல்கிறது?
உக்ரைனும் ரஷ்யாவிற்கு விட்டுகொடுக்க தயாராக இல்லை. அதன் நல்ல உதாரணமே, ‘மொழிபெயர்ப்பாளர்’. இந்த சந்திப்பு குறித்த உக்ரைனின் கருத்து, ‘ரஷ்யாவின் கோரிக்கைகள் ஏற்றுகொள்ளும் விதமாக இல்லை’ என்பது தான்.

இனி என்ன நடக்கும்?
ரஷ்யாவை தவிர்த்த ஐரோப்பிய நாடுகளின் ஆதரவு முழுக்க முழுக்க உக்ரைன் பக்கம் தான் இருக்கிறது. ட்ரம்பும் சீக்கிரம் இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். அதனால், ரஷ்யா இழுத்தடிக்க இழுத்தடிக்க அவர்களுக்கு நெருக்கடிகள் அதிகரித்து கொண்டே வரும். ரஷ்ய அதிபரின் நண்பரான அமெரிக்க அதிபர், ‘நண்பனுக்கு எதிராக’ மாறக்கூடும். ஏற்கெனவே, அவர் நண்பன் மீது அதிருப்தியில் தான் உள்ளார்.
மேலும், அதிருப்தி அதிகமானால், அமெரிக்கா மட்டுமல்ல… பிற நாடுகளும் ரஷ்யாவை தங்களது வரி விதிப்பின் மூலம் தாக்கும்.
இனி முடிவு ரஷ்யாவின் கையில் தான்!