
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்
நிலவுப் பெண் புவிக்கோளத்தில் மறுபுறத்திற்கு தன் பயணத்தை துவக்கிய நேரம்.. வந்து சேர்ந்த சூரியன், தன் பயணக் களைப்பையும் மறந்து வானத்தின் இருட்டுக்கு வெள்ளை அடிக்க யத்தனித்துக் கொண்டிருந்தான்.
‘வெள்ளை நிறத்திற்கும், ஆரஞ்சு நிறத்திற்கும் வித்தியாசம் தெரியவில்லையா சூரியனே’ என்று பறவைகள் கேலி பேசி சிரித்து பறந்து மகிழ்ந்துக் கொண்டிருக்கும் காலை நேரம்..
இரவு பெண்ணின் மடியில் இன்னும் நித்திரை கலைக்க விரும்பாமல் அவன் புரண்டு படுத்தான். தூக்கத்திலேயே கைகளை நீட்டி அவளைத் தேடியவனது கைகளில் அகப்பட்ட அவள் வழக்கத்திற்கும் மாறாக சில்லென்று இருப்பதை உணர்ந்தவன் பதறி விழித்தான்.
“குட்டிம்மா ..குட்டிம்மா எழுந்துக்கோ..” அவளை உலுக்கி எழுப்ப முயற்சித்தான். முயற்சியில் தோல்வியைக் கண்டவனுக்குள் பதட்டம் அரும்பியது. தூக்கம் முற்றிலுமாக கலைய, அவளை அள்ளி எடுத்து தன் மடியில் கிடத்திக் கொண்டு, “குட்டிம்மா எழுந்துக்கோ.. விளையாடாத.. எனக்கு ரொம்ப பயமா இருக்கு ” , என்று மறுபடியும் எழுப்ப முயற்சித்தான். ஒருவாறாக நிஜம் புரிய அவள் அவனை விட்டு வெகு தூரம் சென்று விட்டதை உணர்ந்தான்.
அவனது உலகம் அசைவற்று நின்றது. அவன் கைப்பற்றி அவனோடு முதல் அடி எடுத்து வைத்த நாளிலிருந்து இன்று வரை அவனைப் பிரிந்தது இல்லை அவள். தலை பிரசவத்திற்கு அழைக்க வந்த பெற்றோரிடம் கூட ‘அவனைப் பிரிந்து வரமாட்டேன்’ என்று நிர்தாட்சண்யமாக மறுத்தவள் அவள். அவனில்லாமல் பிரசவ அறைக்குள் வர மாட்டேன் என்று அழிச்சாட்டியம் செய்த பிடிவாதக்காரி அவள்.

வலி தாளாமல், “ம்மா..” என்று அவள் கதறலாய் அழைத்து அவனைத்தான் என்று அவர்கள் இருவர் மட்டுமே அறிவார்கள் .
அவன் பணியின் நிமித்தம் வெளியூர் செல்ல நேரும்போது எல்லாம், “எத்தனை நாளாம் இந்த ஊர் சுத்துற வேலை?? “, என்று கோபப்படுவது போல் கேட்பாள் . அவளது கேள்விக்குப் பின் மறைந்திருக்கும் அவளது கலக்கத்தை உணர்பவன், “குழந்தையா நீ ?? இரண்டு நாள்ல வந்துற போறேன்.. அதுக்கு ஏன் இவ்வளவு வருத்தம்?”, என்று சமாதானப்படுத்துவான்.
இரவு எந்நேரம் அவன் பயணம் முடித்து வந்தாலும் விழித்திருந்து அவன் முகம் பார்த்து, “எதாவது சூடா தரவா ?? பால் கொண்டு வரவா ? ” என்று பரிதவிப்பவளது விழிகள் அவனை ஆசையாய் வருடும். “ஒண்ணும் வேணாம்.. நேரத்துக்கு தூங்குனு எத்தனை தேவை சொல்லறது உனக்கு ” என்று கடிந்து கொண்டே அணைத்துக் கொள்வான்.
ஒரு கட்டத்தில் குழந்தைகள், அவர்களது படிப்பு, வேலை என்று வாழ்க்கையின் பரபரப்பில் தன்னை புதைத்துக் கொண்டாலும், அவன் வீட்டினுள் நுழைந்த நொடியில் அவளது விழிகள் மின்னும்..

அவன் ஏதாவது கோபத்தில் , சலிப்பில் இருந்தால் காபி தருவது போல் அவனருகில் வருபவள் , அவனே அறியாமல் இயல்பாக அவனோடு நெருங்கி நிற்பாள் .அவளுக்குத் தெரியும்..அவளது தொடுகை மட்டுமே அவனை மீட்டு எடுக்கும் என்று . அவனறியாமல் அவளது வயிற்றில் தலை சாய்ப்பவன் சிறிது நேரத்தில் அத்தனை உற்சாகத்துடன் எழுவான். கூட்டத்தின் நடுவிலும் அவர்களுக்கான தனிமையை உருவாக்கத் தெரிந்தவள் அவள் .
பல நாள் இரவுகளில் பிள்ளைகள் இருவரையும் மடியில் சாய்த்துக் கொண்டு தலை கோதியபடி பாடி உறங்க பண்ணுவாள். ‘அது என் இடம் ‘ என்று வம்பிழுப்பவனை பிள்ளைகளைக் காட்டி விழிகளால் மிரட்டுவாள்.. ஆனாலும் அவனையும் பிள்ளைகள் அறியாமல் தன்னருகில் இழுத்துக் கொள்வாள் ..
தினமும் காலையில் அவனை எழுப்பி விடுபவள் அவள் தான்.. “ம்மா .. எழுந்துக்கோ ..நேரமாச்சு ல..” காதுகளுக்குள் மெல்லிசையாய் வருடும் அவள் குரல்.
அவனது நெற்றியில் முட்டி அவள் சொல்லும் ‘குட் மார்னிங்’ இல்லாமல் அவனது பொழுதுகள் விடிவது இல்லை . காலை நேர பரபரப்பில் குழந்தைகளுடன் பம்பரமாய் சுழல்பவளது பார்வை அவனைத் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
“நைட் எல்லாம் இருமிட்டு இருந்த ..மஞ்சள் மிளகு போட்டு பால் வச்சிருக்கேன் ..டீ கிடையாது உனக்கு..”
” அந்த லைட் கலர் ஷர்ட் போட்டுக்கோ.. சேர்மன் கூட மீட் இருக்குனு சொன்னியே.. அஜெண்டா பாய்ண்ட்ஸ் நோட் பண்ணின பேப்பர் பெட் ரூம் டேபிள்ல இருக்கு ..எடுத்து வச்சிக்கோ ”
” இன்னிக்கு தானே ஆடிட்டர் கிட்ட வரேன் னு சொல்லி இருக்க ..பைலை உன் பேக் ல வச்சிட்டேன்..தேடாதே..”
” உனக்கு தேங்காய் சட்னி வேணாம்,..புதினா சட்னி போட்டுக்கோ ..பசியே இல்லை னு சொல்லிட்டு இருந்தியே..”
“வெளிய கிளம்பும் போது திருநீறு இல்லாம கிளம்பாதே…துளி திருநீறு வச்சிக்கோ..”
“டேபிள் மேல உனக்கு சாக்ஸ் , பர்ஸ் , மொபைல் ,கார் சாவி எல்லாம் எடுத்து வச்சிட்டேன்..நிதானமா சாப்பிட்டு கிளம்பு ..”
” உனக்கு பிடிச்ச வெஜ் ரைஸ் தான் இன்னிக்கு லஞ்ச் ..நேரத்துக்கு சாப்பிடு..”
வேலைகளில் புதைந்திருந்தாலும் அவளால் அவனது தேவைகளை உணர முடியும்..
அவன் வீட்டில் இருக்கும் நேரங்களில் அவனது மூச்சுக்காற்று தொடும் தூரங்களில் நடமாடுவாள். மெல்லிய கொலுசொலியுடன் அவளது அருகாமை தரும் இதம் தான் அவனது உற்சாக ஊற்று. அவனை காயப்படுத்துவது யாராக இருந்தாலும் அவளை பொறுத்தவரைக்கும் மன்னிப்புக்குத் தகுதியற்ற குற்றவாளிகள்.
ஏமாற்றங்ளைத் தாங்காத பூஞ்சை மனசுக்காரி அவள். ஆனாலும் தவறு செய்தது அவனாக இருக்கும் பட்சத்தில், அவளிடம் அவன் மன்னிப்பு கேட்பதைத் தாங்க மாட்டாள்.

அவனுக்கு முன் “நான் தான் தப்பா நினைச்சிட்டேன்..சாரி ம்மா..” என்று இறங்கி வந்து விடுவாள் ..
“உனக்கு என் மேல கோபமே வாராதாடி ??”
” எதுக்கு கோபப்படணும்? எனக்கு உன்கிட்ட இது பிடிக்கும் அது பிடிக்கும் னு எல்லாம் ஏதும் இல்ல ..எனக்கு உன்னை பிடிக்கும் ..அப்புறம் எப்படி கோபம் வரும் ?” மென்மையாய் புன்னகைத்து நகர்ந்து விடுவாள் .
எந்தவித கணக்கீடுகளும் இன்றி, அவனை அவனுக்காகவே நேசிக்கும் பைத்தியக்காரி அவள் .
“உனக்கேண்டி என்னை இத்தனை பிடிச்சிருக்கு??”
“தெரியலயேம்மா..எனக்கு உன்னை பிடிக்கும்.. உன்னை மட்டும் தான் பிடிக்கும்..” நேர்பார்வையுடன் வரும் அவளது வார்த்தைகள் அவளது மனதில் அவன் மட்டுமே நிறைந்திருப்பததைச் சொல்லும் ..
கொஞ்ச நாட்களாகவே அவள் சற்று சோர்வாய் இருந்தது போல் இப்போது தோன்றியது . அவனிடம் ஏதோ சொல்ல வருவது போல் தோன்றும்..அலுவலக வேலைப் பளுவில் அவளை கவனிக்கவில்லையா ?? என்ன சொல்ல வந்தாள் …இப்போதெல்லாம் அவளோடு செலவிடும் நேரங்கள் மிகவுமே குறைந்து போனதை இப்போது உணர்ந்தான். வாழ்க்கையின் ஓட்டத்தில் பலவித பொறுப்புகளுடன் ஓடிக்கொண்டு இருந்தவன் அவளது வெறுமையை உணரத் தவறி விட்டானோ.
சிலசமயம் ஏதோ நினைத்துக் கொண்டவளாக , ” நான் யார் உனக்கு ? ” என்பாள் .
“லூசா டீ நீ ..நீ என் மனைவி ..வேறென்ன சொல்லணும் ? சரி !! நீ தான் சொல்லேன் ..நான் யார் உனக்கு ?..”
நொடி கூடத் தயங்காமல் பதில் வரும் ..”என் எல்லாமும் …” என்று ..
அவளது வார்த்தைகளை செவிகளோடு விட்டு விட்டானோ ? அதன் வீரியம் இன்று வேறு மாதிரி தாக்கியது .என்ன எதிர் பார்த்தாள் என்னிடம்?
அவள் யார் எனக்கு ..மனைவி? ..காதலி ?..அது மட்டும் தானா ..எனக்குள் உயிரின் சக்தியாய் இருந்தவள் அவள் தானே ..அதை அவளிடம் சொல்லி இருக்க வேண்டுமோ ..சொல்லி விட்டு அவள் கண்களில் தெரியும் மின்னலை ரசித்திருக்க வேண்டுமோ..

அவள் விருப்பங்களை இன்னும் அறிந்திருக்க வேண்டுமோ …அவனறிந்த தம்பதிகளுக்குள் நிகழும் கருத்து வேறுபாடுகள் அவன் வீட்டின் வாசல் கூட தீண்டியது இல்லையே.
அவனது விருப்பங்கள் வெறுப்புகள் மட்டுமே அவளதும் என்று வாழ்ந்தாளே..அதை இன்னும் கொண்டாடியிருக்க தவறி விட்டேனோ?
“ம்மா ..”
” கொஞ்சம் பிஸியா இருக்கேன் மா ..நீ தூங்கு ..நாளைக்கு பேசிக்கலாம் ” என்ற போது , அவள் கண்களில் படர்ந்ததென்ன ? வேதனையா ..ஏமாற்றமா ..
என்ன சொல்ல வந்தாள் என்று கேட்டிருக்கலாமோ? எப்போதும் அவன் நெஞ்சில் முகம் புதைப்பவள் ,. அன்று அசையாமல் படுத்திருந்தாளே ..அசதியில் உறங்குகிறாள் என்று நினைத்தது தவறோ ?
அவள் ஒன்றும் யதார்த்தம் அறியாதவள் இல்லையே ..பல விஷயங்களில் அவளது புரிதலையும் , அவனை அனுசரித்து செல்வதையும் பார்த்தவன் தானே அவன்.அவளை நாள் முழுதும் இயக்கம் ஜீவசக்தியாக அவளுடன் மட்டுமேயாக அவன் செலவழிக்கும் நிமிடங்கள் இருந்ததை உணரத் தவறி விட்டானோ ?
அதனால்தான் அவனை பார்ப்பதே போதும் …அவனது சுவாசம் தொடும் தூரத்தில் வாழ்வதே போதும் என்று தன்னைத் தானே சுருக்கிக் கொண்டாளோ .. அவனும் அவளும் மட்டுமேயான ஒரு உலகத்தை தனக்குள்ளே உருவாக்கிக் கொண்டு வாழ்வதைக் கனவிலும், கடமை செய்வதை நினைவிலும் இடம் மாற்றிக் கொண்டாளோ ..
இறைவனே …ஒரு நிமிடம் அவளை திரும்பத் தா ..அவளிடம் கொட்டி கவிழ்க்கவென என் மனதில் நிரம்பித் தளும்பும் காதலைச் சொல்ல ஒரு வாய்ப்பு தா ..
என் தாயின் கருவறை சுகத்தை தன் கை வளைவில் மறுபடி அளித்த என்னவளை திரும்பத் தா .. இரு குழந்தைகளின் பின்பும் என்னை மட்டுமே மையமாகக் கொண்டு சுழன்ற என் உலகைத் திரும்பத்தா..
மனதுக்குள் அரற்றினான் ..
“ம்மா…என்னம்மா ஆச்சு .. தூக்கத்துலயே பேசற?? என்னனென்னவோ சொல்லற??..எழுந்துக்கோ தங்கம் ..”
சில்லென்ற ஸ்பரிசம் அவன் முகம் வருடி முடி கோதியது …
கனவா..கடவுளே ..நிஜமாகவே கனவு தானா ..நான் கேட்பது அவள் குரல் தானா .. இது தான் எனக்கான இரண்டாவது வாய்ப்பா …
” குட்டிம்மா ..நிஜமா நீதானா..” பதறி விழித்து அவளை அணைத்து அவள் தோள் வளைவில் முகம் புதைத்துக் கொண்டான் ..
“என்ன விட்டு எங்கேயும் போயிராதே மா ..லவ் யு குட்டிம்மா…”
கண்ணீரின் ஈரம் உணர்ந்தவள், வேகமாக விலகி அவன் முகம் பார்த்தாள் ..
“என்னம்மா ..என்னாச்சு…ஏன் அழற ..”பதறிப் போனவள் ,காய்ச்சல் இருக்கிறதா என தொட்டுப் பார்த்தாள் …
“இப்போ தான் தெளிஞ்சிருக்கு ..சாரிம்மா ..உன்னை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேனோ …”
“என்ன தங்கம் சொல்லற ..என்ன கஷ்டம் …யாருக்கு …” அவளுக்கு ஒன்றும் புரியவில்லை..அதனால் ஒன்றுமில்லை .
புரிய வேண்டியது அவளுக்கு இல்லையே..அவளை இழுத்து இறுக அணைத்துக் கொண்டவனுக்குள் அவளை மீண்டும் தொலைத்து விடக் கூடாத உறுதி தெறித்தது .
–Selva Kiruthika Gowrinathan
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.